உலகம் புதியதொரு சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் பன்முகத்தன்மை, பொருளியல் ஒருங்கிணைப்பு, உலகப் பொதுவளங்கள் ஆகியவை முக்கியத்துவம் பெறுவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மெய்நிகர் முறையில் நடைபெற்ற 'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' கருத்தரங்கில் அவர் முக்கிய உரையாற்றினார். கருத்தரங்கில் அரசாங்கங்களின் மூத்த அதிகாரிகள், வர்த்தகத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பகைமை உணர்வு, உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு ஆகியவற்றுடன் இந்த வட்டாரத்திற்கு நெருக்கடி தரும் விவகாரங்களைப் பற்றி அவர்கள் கலந்துபேசினர்.
உக்ரேனியப் போர் சிறிதளவும், கொவிட்-19 கிருமிப் பரவல் பெரிய அளவிலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலகப் பொருளியல் ஒருங்கிணைப்புக் கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக டாக்டர் பாலகிருஷ்ணன் தமது உரையில் குறிப்பிட்டார்.
விதிமுறைகள் அடிப்படையிலான அனைத்துலக ஒழுங்குமுறையையும் அவை பாதித்துள்ளன என்றார் அவர்.
அதேநேரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி, உக்ரேனிய நெருக்கடியால் மேலும் சிக்கலாகும் வாய்ப்பையும் அவர் எடுத்துரைத்தார்.
உலக நாடுகள் பன்முகத்தன்மை, அனைத்துலகச் சட்டம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

