செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
2c70d15f-1f78-4807-b763-ef81cb61b815
-

பணம் கட்டாமல் உணவகத்தை ஏமாற்றிய காதலர்கள்

சிராங்கூன் கார்டன்ஸ் வட்டாரத்தில் உள்ள பா புல் லோ கொரிய உணவகத்தில் முதல்முறையாகச் சந்தித்த காதலர்கள் கிட்டத்தட்ட $270 மதிப்புமிக்க உணவை உண்டபின் பணம் தராமல் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

உணவகம் அவர்களைத் தொடர்புகொண்டு பணம் கட்டச் சொன்னபோது இருவரில் மற்றவர்தான் அதற்குப் பொறுப்பு என்று ஒருவர் மற்றவரைக் கைகாட்டியதாகக் கூறப்பட்டது.

சில நாள்களுக்குப் பிறகு, பெண் மட்டும் தனக்கான தொகையைச் செலுத்திவிட்டார். ஆனால் ஒரு வாரம் ஆன நிலையிலும் ஆடவரிடம் இருந்து பணத்தைப் பெற இயல வில்லை என்று உணவகம் தெரிவித்தது.

அதன்தொடர்பில் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாக உணவகம் கூறியது. மார்ச் 15ஆம் தேதி தன்னைச் சந்தித்த அந்தப் பெண் உணவுக்குத் தான் பணம் செலுத்துவதாகத் தன்னிடம் முன்னர் கூறியிருந்ததாக ஆடவர் சொன்னார்.

அதனால் உணவுக்கு நன்றி கூறிவிட்டு தான் வெளியில் சென்று காத்திருந்ததாகவும் கழிவறைக்குச் சென்று திரும்பிய அந்தப் பெண் வெளியே வந்தபோது அவர் பணம் செலுத்திவிட்டதாகத் தான் கருதியதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அவர் கூறினார்.

மார்ச் 19ஆம் தேதி உணவகத்திடம் தனது பங்குக்கான பணத்தை மட்டும் அந்தப் பெண் செலுத்தியதாகத் தெரிகிறது.

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு

சிங்கப்பூரில் ஒரு வாரம் குறைந்திருந்த பெட்ரோல் விலை மீண்டும் மூன்று வெள்ளிக்கு மேல் உயர்ந்துள்ளது. உக்ரேன் நெருக்கடி மட்டுமின்றி உலகெங்கும் பயனீட்டாளர் தேவை வெகுவாக அதிகரித்திருப்பதால் எரிபொருள் விலை கூடியதாகக் கருதப்படுகிறது.

கால்டெக்ஸ், எஸ்ஸோ நிலையங்களில் ஒரு லிட்டர் 92-ஆக்டேன் ரக பெட்ரோல் விலை $3.01 ஆக உள்ளது. எஸ்பிசியில் அதன் விலை $2.94.

கால்டெக்ஸ், எஸ்ஸோ, சைனோபெக் ஆகியவற்றில் ஒரு லிட்டர் 95-ஆக்டேன் ரக பெட்ரோல் $3.05க்கு விற்கப்படும் வேளையில், ஷெல் $3.09க்கும், எஸ்பிசி $2.98க்கும் விற்பனை செய்கின்றன.

ஒரு லிட்டர் 98-ஆக்டேன் ரக பெட்ரோலின் விலை $3.46 முதல் $3.58 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு நிலையங்களில் ஒரு லிட்டர் டீசலின் விலை $2.61ல் இருந்து $2.95 வரை உள்ளது.

கட்டணத்தை உயர்த்துகிறது டடா

வாடகை கார் சேவை நிறுவனமான டடா, தற்காலிக ஓட்டுநர் கட்டணம் என்ற நடைமுறையை அறிமுகப்படுத்தவிருக்கிறது. சில நாள்களுக்கு முன்னர் கோஜெக் நிறுவனம் இதேபோன்ற நடைமுறையை அறிவித்திருந்தது.

ஏப்ரல் 4ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை, பயணிகள் குறுகிய தூரப் பயணங்களுக்குக் கூடுதலாக 50 காசு செலுத்தவேண்டும். நீண்ட தூரப் பயணங்களுக்கு 80 காசு கூடுதலாகச் செலுத்தவேண்டும்.

எரிபொருள் விலை உயர்வை முன்னிட்டு இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் எரிபொருள் விலை குறைந்தால் கட்டண உயர்வு மறுஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கத்தியைக் காட்டி குடும்பத்தினரை மிரட்டிய ஆடவருக்குச் சிறை

குடிபோதையில் 50 வயதுத் தாயாரையும் முறையே 16, 22 வயதான இரண்டு சகோதரிகளையும் கத்தியைக் காட்டி மிரட்டிய ஆடவருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த 21 வயது ஆடவர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் நேற்று ஒப்புக்கொண்டார்.

சென்ற ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் வீடு திரும்பிய ஆடவர், விளக்குகளை எரியவிட்டதுடன் புகைபிடிக்கத் தொடங்கினார்.

கண்விழித்த தாயார் வீட்டுக்குள் புகைபிடிக்க வேண்டாம் என்று சொன்னதைத் தொடர்ந்து வாக்குவாதம் மூண்டது. சமையலறைக் கத்தியைக் கழுத்தில் அழுத்திக் கொன்றுவிடுவதாகத் தாயாரை மிரட்டிய ஆடவர் சகோதரிகளையும் மிரட்டினார்.

தங்கை காவல்துறையிடம் புகாரளித்ததைத் தொடர்ந்து ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.