சிங்கப்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் மூலாதார பணவீக்க அதிகரிப்பு கொஞ்சம் குறைந்தது. சேவை, உணவு, மின்சாரம், எரிவாயு ஆகியவற்றில் அது குறைந்திருந்தது.
மூலாதார பணவீக்கம் ஜனவரியில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.4 விழுக்காடாக நிலவியது. சென்ற மாதம் அது ஆண்டுக்காண்டு அடிப்படையில் 2.2 விழுக்காடாகக் குறைந்தது.
குடியிருப்பு, தனியார் போக்குவரத்துச் செலவுகளை நீக்கிவிட்டு கணக்கிடப்படும் மூலாதார பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து 2.6 விழுக்காட்டை எட்டும் என்று புளூம்பர்க் ஆய்வில் பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததைப் போல பிப்ரவரியில் மூலாதார பணவீக்கம் இல்லை. இருந்தாலும்சென்ற மாதம் ஒட்டுமொத்த பணவீக்கம் 4.3% ஆகக்கூடியது.
இது, அதற்கு முந்திய மாதம் 4% ஆக இருந்தது. தனியார் போக்குவரத்துச் செலவு கூடியதே இதற்கான காரணம்.
உலகளாவிய பணவீக்கம் கொஞ்ச காலத்திற்குத் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வரும். பிறகு இந்த ஆண்டின் பிற்பகுதியில் அது குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கின்றன.
இந்த ஆணையம், வரும் ஏப்ரலில் தன் நாணயக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய இருக்கிறது.
அப்போது கொள்கைகளை இன்னும் அது இறுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொருளியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதன் விளைவாக சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு மேலும் அதிகரிக்கும். உள்நாட்டைப் பொறுத்தவரை தொழிலாளர் சந்தை தொடர்ந்து இறுக்கமாகவே இருந்து வரும். அதன் காரணமாக சம்பள நெருக்குதல்கள் வலுவடையும் என்றும் கூட்டறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கார், குடியிருப்புச் செலவுகள் அதிகரிப்பு கொஞ்சகாலத்திற்குத் தொடர்ந்து இருந்து வரும்.
இதனால் மொத்த பணவீக்கம் அதிகமாக இருக்கும் என்பதை அவை சுட்டின.
கார் விலை கூடியதால் மொத்த விலைவாசி அதிகரிப்பு

