ஓரினப் புணர்ச்சியாளர், திருநங்கைஉள்ளிட்டோர் (எல்ஜிபிடி) பிரச்சினைகள், தண்டனை விதித்தொகுப்பின் 377ஏ பிரிவு ஆகியவை தொடர்பான பொது ஆய்வு புதன்கிழமை முடிந்தது.
அதில் 30,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.
அரசாங்கத்தின் ரீச் கருத்தறியும் பிரிவு, பல ஆய்வுகளை நடத்தி இருக்கிறது. அவற்றில் பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறார்கள்.
ஆனால் இந்த ஆய்வில்தான் இதுவரை இல்லாத அளவுக்கு இவ்வளவு ஆயிரம் பேர் கலந்துகொண்டு உள்ளனர் என்று ரீச் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஆய்வில் திரட்டப்பட்ட தகவல்கள் ஏற்புடைய அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும். கொள்கைகளை மேம்படுத்தவும் மாற்றங்களைச் செய்யவும் அரசாங்கத்திற்குள்ளாக அந்தத் தகவல்கள் பயன்படக்கூடும் என்றும் ரீச் அமைப்பு தெரிவித்து உள்ளது.
"சிங்கப்பூரில் எல்ஜிபிடி சமூகம் பற்றிய உங்களுடைய கருத்துகளைச் செவிமடுக்க விரும்புகிறோம். இந்த ஆய்வில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்," என்று முன்னதாக ரீச் அமைப்பு தெரிவித்து இருந்தது.
ஆடவர்களுக்கு இடையில் பாலியல் தொடர்புகள் இருந்தால் அவற்றை குற்றச் செயல்களாக வகைப்படுத்தும் சட்டத்தைத் தலைசிறந்த முறையில் எப்படி செம்மையாகத் திருத்தி அமைக்கலாம் என்பது பற்றி அரசு மிகவும் கவனமாக ஆராய்ந்து வருகிறது என்று சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம் இம்மாதத் தொடக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
"வெவ்வேறு வகையான கண்ணோட்டங்களுக்கு நாம் மரியாதை கொடுக்கவேண்டும். அவற்றைக் கவனமாக பரிசீலிக்க வேண்டும். பலதரப்பட்ட குழுக்களோடும் பேசவேண்டும்," என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

