மருத்துவமனையில் முற்றிலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 42 வயது பெண் நோயாளி ஒருவரை துப்புரவு ஊழியர் மானபங்கப்படுத்தினார்.
பக்கவாத பாதிப்பு இருந்தாலும் சொந்தமாக ஓரளவுக்குச் செயல்படக்கூடிய நிலையில் இருந்த அந்த மாது, அந்த ஆடவர் தன்னை மானபங்கம் செய்கிறார் என்பதை தெரிந்துகொண்டார். ஆனால் அவரால் பேச இயலாது.
இதனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உதவிக்குக் குரல்கூட கொடுக்க முடியவில்லை என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
ஒரு தாதி வந்து கையும் களவுமாக அந்த ஆடவரைப் பிடித்த பிறகுதான் அந்த ஆடவர் தன் செய்கையை நிறுத்தினார்.
மானபங்கம் செய்ததாக அந்த 56 வயது சிங்கப்பூரர் ஒப்புக்கொண்டார். தடை உத்தரவு காரணமாக மேல் விவரங்களை வெளியிட இயலாது. இந்தச் சம்பவம் சென்ற ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அடுத்த நாளன்று ஆடவர் கைதானார்.
மானபங்கம் செய்ததாக அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்ட அந்த ஆடவர், மன நோய்க்குத் தான் மருந்து சாப்பிடவில்லை என்றும் அந்த மாதைத் தொடும்படி தன் காதில் குரல் கேட்டதாகவும் அதுவே தான் அப்படிச் செய்ததற்குக் காரணம் என்றும் அதிகாரி களிடம் கூறினார்.
இதனிடையே, தன் கட்சிக்காரருக்கு மனக்கோளாறு உண்டு என்றும் மருந்து உட்கொள்ளாததே அவர் தவறாக நடந்துகொண்ட தற்குக் காரணம் என்றும் குற்றவாளியின் வழக்கறிஞர் வாதிட்டார்.
குற்றவாளிக்கு அடுத்த மாதம் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.