முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள், ஏப்ரல் 1 முதல் பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்ல அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.
சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கான ஆகப்புதிய கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகள், தங்குவிடுதிகளில் வசிக்கின்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள், வரும் செவ்வாய்க்கிழமை முதல் (மார்ச் 29) 10 பேர் வரை ஒன்றுகூட முடியும். அவர்கள் வெளியே செல்லும்போது விரும்பினால் முகக்கவசத்தை அணிந்துகொள்ளலாம்.
கொவிட்-19 கிருமியுடன் வாழ்வதைச் சாத்தியமாக்கும் திட்டவட்டமான ஒரு நடைமுறை பற்றி பிரதமர் லீ சியன் லூங் நேற்று அறிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன. சமூகத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்ல வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டிய ஒரு நடைமுறை நடப்பில் இருந்து வந்துள்ளது.
அந்த அனுமதியைப் பெற்ற பிறகுதான் தங்கள் தங்குவிடுதியில் இருந்து அவர்கள் வெளியே சென்றுவர முடியும். ஆனால் இந்த தேவை இனி அவர்களுக்கு இராது. என்றாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் மட்டுமே ஏப்ரல் முதல் இந்த அனுமதியைப் பெற வேண்டி இருக்கும்.
அதோடு, ஏஆர்டி பரிசோதனையையும் இவர்கள் செய்துகொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்குச் சமூகத்தில் கலந்துறவாட அனுமதி இருக்காது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் வார நாள்களிலும் வார முடிவு, பொது விடுமுறை நாள்களிலும் வெளியே சென்று வருவதற்கான வரம்பு அளவு சென்ற வாரம் அதிகரிக்கப்பட்டது. ஏற்கெனவே வார நாள்களில் 3,000 பேரும் வார முடிவு, பொது விடுமுறை நாள்களில் 6,000 பேரும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த வரம்பு முறையே 15,000 ஆகவும் 30,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. இந்த வரம்பில் மாற்றம் இருக்காது என்றும் அமைச்சு தெரிவித்து இருக்கிறது. இருந்தாலும் இனிமேல் ஊழியர்கள் ஏஆர்டி பரிசோதனைக்கு உட்பட வேண்டாம்.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் வசிப்போரில் 98 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
பூஸ்டர் ஊசியைப் போட்டுக்கொள்ளும் அத்தகைய ஊழியர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் கடந்த டிசம்பர் முதலே அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்து வருகிறது.
சிங்கப்பூரில் கொரோனா கிருமி தலைகாட்டிய முதல் ஆண்டில் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில்தான் படுமோசமான பாதிப்புகள் இருந்தன.
2020 ஏப்ரலில் அத்தகைய விடுதிகளில் தங்கியிருந்த ஊழியர்களில் 31 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்றி இருந்தது. இந்த எண்ணிக்கை அதே ஆண்டு ஜூன் மாதத்தில் 33,000 ஆகக் கூடிவிட்டது.
அந்த ஆண்டில் கிருமி தொற்றிய 20 பேரில் 19 பேர் வெளிநாட்டு ஊழியர்களாக இருந்தனர். 2021 ஆண்டு முடிவில் 323,000 தங்குவிடுதி ஊழியர்களில் 175,000க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று இருந்தது.
ஆனால் பிறகு இந்த நிலைமை படிப்படி யாக சீரடைந்து தொற்று குறைந்துவிட்டது.

