அமைச்சர்: அவசர சிகிச்சை நாடுவோரில் அதிகம் பேர் கொவிட்-19 சாரா நோயாளிகள்
சிங்கப்பூரில் ஓமிக்ரான் தொற்று ஒடுங்குகிறது. இந்த நிலையில் தொற்றுக் காலத்தில் தாங்கள் பட்ட கடனை மருத்துவமனைகள் திருப்பி அடைக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
மருத்துவக் கவனிப்பு தேவை இருக்கின்ற அதிக எண்ணிக்கை யிலான முற்றிய நோயாளிகள் மீது இப்போது மருத்துவமனைகள் தங்கள் கவனத்தைத் திருப்புகின்றன.
மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை நாடும் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் இப்போது கொவிட்-19 அல்லாத இதர நோயாளிகளாக இருக்கிறார்கள் என்பதை அமைச்சர் சுட்டினார்.
திரு ஓங், அமைச்சுகள்நிலை கொவிட்-19 பணிக்குழு செய்தியாளர்கள் கூட்டத்தில் நேற்று பேசினார். கடந்த இரண்டாண்டு காலத்தில் மருத்துவமனைகள் கொவிட்-19 நோயாளிகளைக் குணப்படுத்த வேண்டியநிலை இருந்தது.
இதனால் முற்றிய நோயாளிகள் பலரையும் கவனிக்க இயலாத சூழ்நிலை மருத்துவமனைகளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இப்போது இத்தகைய நோயாளி கள் மீது கவனத்தைச் செலுத்தி மருத்துவமனைகள் வழக்கமாகச் செயல்பட வேண்டியநிலை இருக்கிறது. இத்தகைய நோயாளிகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பை மருத்துவமனைகள் அடைக்க வேண்டிய ஒரு கடன் என்று குறிப்பிட்ட அமைச்சர், ஏதாவது ஒரு வழியில் இதைத் திருப்பி அடைக்க வேண்டி இருக்கிறது என்றார்.
இந்தக் கடன் கொவிட்-19 சாராத தனிப்பட்ட சுகாதாரப் பராமரிப்புச் சுமையாக ஆகியிருக்கிறது.
கொவிட்-19 தொற்று எண்ணிக்கை ஏறினாலும் இறங்கினாலும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் பணி மீதான அதன் தாக்கம் மிக ஏற்றமாக இருக்காது.
இருந்தாலும்கூட நீண்டகாலப் போக்கில் அமைப்பு ரீதியான செயல்கள் தேவைப்படுகின்றன.
இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க அமைச்சு நான்கு செயல் களைச் செய்து வருகிறது என்று திரு ஓங் கூறினார்.
முதலாவதாக, மருத்துவமனைகளில் வழக்கமான நோயாளிகளுக்குச் சேவையாற்றுவதில் தன்னுடைய ஒருமித்த கவனத்தைப் படிப்படியாக அது திருப்புகிறது.
இரண்டாவதாக, நீண்டகாலப் போக்கில் சிகிச்சை பராமரிப்பு நிலையங்களின் கொள்ளளவை விரிவுபடுத்துவது; சுகாதார அமைச்சு கொவிட்-19 சிகிச்சை வசதிகளை முற்றிலும் பயன்படுத்திக்கொள்ளும் அணுகுமுறை மூன்றாவது முயற்சியாக இருக்கும்.
நான்காவதாக, தனியார் மருத்துவமனைகளுடன் தன்னுடைய இப்போதைய ஒருங்கிணைந்த செயல்பாடுகளைச் சுகாதார அமைச்சு தொடரும் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.

