கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்ட எல்லாரும் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லாமல் சிங்கப்பூருக்கு ஏப்ரல் 1 முதல் வர முடியும்.
அவர்கள் 'விடிஎல்' எனப்படும் தடுப்பூசி போட்டோருக்கான விமானப் பயணப்பாதைத் திட்ட விமானங்களில்தான் வரவேண்டும் என்ற தேவையும் இருக்காது.
சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன் அவர்கள் கொவிட்-19க்கு எதிரான ஒரு பரிசோதனையைச் செய்து கொண்டாலே போதுமானது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்தகைய பயணிகளில் 12 வயதும் அதற்கு குறைவான வயதும் உள்ள சிறார்களும் அடங்குவர்.
சிங்கப்பூர் தன்னுடைய எல்லைகளைத் திறந்துவிடுகிறது. இதனை அடுத்து இங்கு தரையிறங்கியதும் 24 மணி நேரத்துக்குள் ஏஆர்டி பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டிய தேவையும் பயணிகளுக்கு இனி இராது. அன்றாடம் இவ்வளவு பயணிகள்தான் வரமுடியும் என்ற வரம்பும் அகற்றப்படும்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அனைவரும் நுழைவு அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற தேவையும் அகற்றப்படும்.
இத்தகைய புதிய கொள்கைகள் காரணமாக தொற்றுக்கு முன்பு இருந்த நிலை கிட்டத்தட்ட திரும்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது நடப்பில் இருக்கும் விடிஎல் திட்டத்திற்குப் பதிலாக 'தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயண ஏற்பாடு' என்ற புதிய திட்டம் நடப்புக்கு வருகிறது.
இருந்தாலும் சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன் குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்குள் கொவிட்-19 பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும் என்ற தேவை தொடர்ந்து இருந்து வரும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
13 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ள, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நீண்டகால அனுமதிதாரர்கள், குறுகியகால வருகையாளர்கள் சிங்கப்பூருக்கு வர பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை.
இருந்தாலும் மருத்துவ நிலவரங்கள், செல்லுபடியாகக்கூடிய நுழைவு அங்கீகாரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து விதிவிலக்குகள் கொடுக்கப்படும்.
இவர்கள் சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன் இரண்டு நாள்களுக்குள் கொவிட்-19 பரிசோதனை செய்து கொண்டிருக்கவேண்டும். இங்கு வந்ததும் ஏழு நாள்கள் தனிமையில் இருக்கவேண்டும்.
தனிமைக்காலம் முடியும்போது பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

