சிங்கப்பூர்-இந்தோனீசியக் கூட்டு
முயற்சி $2.3பி. முதலீடு ஈர்ப்பு
இந்தோனீசியாவில் உள்ள கெண்டல் தொழில்துறைப் பூங்காவில் வாடகைக்கு இடங்களைப் பயன்படுத்த 72 பேர் முன்வந்துள்ளனர். இதன் மூலம் சுமார் ஆறே ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட இந்தப் பூங்கா
2.3 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள முதலீட்டை ஈட்டியுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
'கெண்டல் ரீஜன்சி', 'கெண்டல்' தொழில்துறைப் பூங்கா, இந்தோனீசியாவின் வர்த்தக அமைச்சு ஆகியவற்றுக்கு இடையே பயிற்சிகள், விநியோகம் உள்ளிட்டவற்றின் தொடர்பில் இணக்கக் குறிப்பு கையெழுத்தானது. அந்நிகழ்வில் திரு டெஸ்மண்ட் லீ பேசினார்.
மத்திய ஜாவாவில் அமைந்திருக்கும் 'கெண்டல்' தொழில்துறைப் பூங்காவில் அந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் 2016ஆம் ஆண்டு இந்தப் பூங்காவைத் திறந்துவைத்தனர்.
பயண உறுதி அட்டையை
பிறருக்குத் தந்தவருக்குச் சிறை
பணத்திற்காக 'போர்டிங் பாஸ்' எனும் தனது பயண உறுதி அட்டையை வேறொருவருக்குத் தந்த மலேசியருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி, ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொள்ளும் எண்ணம் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவரிடம் தனது பயண உறுதி அட்டையைக் கொடுத்தார். வேலை வாய்ப்புகளுக்காக அந்நபர் பெர்லின் நகருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
இச்சம்பவம் சென்ற மாதம் 10ஆம் தேதியன்று சாங்கி விமான நிலையத்தில் நடைபெற்றது. குற்றவாளியான
49 வயது தஸ்ரதன் ஜெகதீசனுக்கு நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடன் அட்டை விவரங்களைத் திருடியதாக ஆடவர் மீது சந்தேகம்
கடன் அட்டைகளின் விவரங்களைத் திருடி குறைந்தது 4,300 வெள்ளி மதிப்புள்ள பொருள்களை வாங்கியதாக
38 வயது ஆடவர் ஒருவர் சந்தேகிக்கப்படுகிறார். காவல்துறையினர் நேற்று முன்தினம் அவரைக் கைதுசெய்தனர்.
கணினிப் பாகங்கள், மூன்று கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்ததாகக் காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இணையப் புத்தகக் கடை ஒன்றில் இடம்பெற்ற அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைப் பற்றி இம்மாதம் 17ஆம் தேதியன்று தங்களுக்குத் தகவல் வந்ததாகக் காவல்துறை சொன்னது. காவல்துறையின் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள், அந்தக் கடையுடனும் விநியோக நிறுவனமான நிஞ்சா வேனுடனும் இணைந்து சந்தேக நபரை அடையாளம் கண்டு கைதுசெய்தனர்.
தளவாட நிறுவனங்களைக் குறிவைக்கும் புதிய மோசடி
தளவாட நிறுவனங்கள், பொருள்களை இடம் மாற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றைக் குறிவைக்கும் புதியவகை மோசடிச் செயல்கள் தலைதூக்கியிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய மோசடி நடிவடிக்கைகளால் இம்மாதம் குறைந்தது 10 பேர் ஏமாற்றப்பட்டனர். அவர்கள் குறைந்தது 9,000 வெள்ளியை இழந்ததாகக் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
ஒரு கட்டடத்திலோ, கடைத்தொகுதியிலோ வாடகைக்கு செயல்படுபவர்களைப்போல் ஏமாற்றுக்காரர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வர். அதற்குப் பிறகு அவர்கள் வாட்ஸ்அப் போன்ற குறுந்தகவல் செயலிகளின் வாயிலாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பொருள்களை இடம் மாற்றும் சேவைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்வர்.
இப்படிப்பட்ட மோசடிச் செயலை மேற்கொள்பவர்கள், அவர்கள் வாடகைக்கு இயங்குவதாகச் சொல்லும் கட்டட நிர்வாகக் குழுவினர் ஆகிய அனைவரும் ஏமாற்றுக்காரர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய மோசடிச் செயல்களைப் பற்றித் தகவல் தர விரும்புவோர் https://www.police.gov.sg/iwitness இணையத்தளம் வாயிலாகவோ 1800-255-0000 என்ற எண்ணுக்கோ அழைத்து தெரியப்படுத்தலாம் என்று காவல்துறை கூறியது.

