இர்ஷாத் மஹம்மது
இன்று முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கும் நியூயார்க்
நகரத்துக்கும் பணி நிமித்த பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் லீ சியன் லூங். வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், இதர அமைச்சர்கள் ஆகியோரைத் தனித்தனியாக அவர் சந்திக்கிறார்.
நாடாளுமன்றம் செனட் சபை உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ள அவர், வெவ்வேறு அம்சங்களில் நெருக்கமான ஒத்துழைப்பை முன்னெடுப்பது பற்றி கலந்துரையாட வாய்ப்பளிக்கும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் தளம் கொண்டுள்ள வெளியுறவு மன்றத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்பார்.
நியூயார்க்கில் ஐக்கிய நாட்டு மன்றத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், தொழில், நிதித்துறைத் தலைவர்கள், இதர அமெரிக்க பிரபலங்களையும் திரு லீ சந்திப்பார்.
இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரதமர் அமெரிக்கா சென்றிருந்தார்.
திரு பைடன் அதிபராகப் பதவி யேற்றபின் பிரதமர் லீ மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் பயணமான இது, இரு நாடுகளின் துடிப்பான, நீடித்த, பன்முகத்தன்மைமிக்க உறவுகளுக்கு மேலும் வலுசேர்க்கும் என்று நம்பப்படுகிறது. பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ ஆகியோருடன் பிரதமர் அலுவலகம், வர்த்தக தொழில் அமைச்சு, வெளியுறவு அமைச்சு, தொடர்பு, தகவல் அமைச்சு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும் செல்கின்றனர்.
பிரதமர் நாட்டில் இல்லாத சமயத்தில், மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பார் என அறிக்கை குறிப்பிட்டது.

