சமூக சேவை அமைப்புகள் தங்களின் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளவும் கூடுதலானோரைக் கவனித்துக்கொள்ளவும் வகைசெய்ய புதிய கட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
'என்சிஎஸ்எஸ்' எனும் தேசிய சமூக சேவைகள் மன்றமும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் இணைந்து 'ஆர்கனைசேஷனல் ஹெல்த் ஃபிரேம்வொர்க் ஃபார் சோஷியல் சர்விசஸ்' எனப்படும் சமூக சேவைகளுக்கான சுகாதாரக் கட்டமைப்பு அமைப்புமுறையை உருவாக்கியுள்ளன. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் இரண்டாம் சுகாதார அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி இந்தக் கட்டமைப்பைத் தொடங்கிவைத்தார்.
தங்களின் ஆற்றலைக் கணிக்கவும் எந்த அம்சங்களில் தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதை அறிந்துகொள்ளவும் சமூக சேவை அமைப்புகளுக்கு உதவும் ஓர் அங்கம் இந்தக் கட்டமைப்பில் அடங்கும்.
இதற்கு வகைசெய்யும் ஒரு தளம் கட்டமைப்பில் உள்ளது.
புதிய திறன்களை வளர்த்துக்கொள்வது உள்ளிட்டவற்றுக்கான பரிந்துரைகளைக் கொண்ட வழிகாட்டியையும் சமூக சேவைகளுக்கான சுகாதாரக் கட்டமைப்பு அமைப்புமுறை வழங்குகிறது.
இதனைத் தொடர்ந்து சமூக சேவை அமைப்புகள், சமூக ஆற்றல் அறக்கட்டளை நிதி போன்றவற்றிடமிருந்து நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். சமூக சேவைத் துறையை மேம்படுத்த அந்த நிதிக்கு 350 மில்லியன் வெள்ளி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜூரோங் வெஸ்ட்டில் அமைந்துள்ள எப்வர்த் சமூக சேவைகள் அமைப்பின் நிலையத்தில் அமைச்சர் மசகோஸ் சமூக சேவைகளுக்கான சுகாதாரக் கட்டமைப்பு அமைப்புமுறையைத் தொடங்கிவைத்தார். எப்வர்த் சமூக சேவை அமைப்பு, வசதி குறைந்த பிள்ளைகளுக்கும் இளையர்களுக்கும் ஆதரவு வழங்கி வருகிறது.
"புதிதாக எழும் பிரச்சினைகள் குடும்பங்களை மேலும் நெருக்கலாம். சமூக முன்னேற்றத்தைக் கட்டிக்காப்பது இன்னும் சிரமமாகும். அதனால் சமூக சேவைத் துறை, அது வழங்கும் சேவைகளின் தரம், எண்ணிக்கை ஆகியவற்றில் மட்டுமின்றி நமது அமைப்புகள் வலுவாக இருப்பதையும் வருங்காலத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் உருமாறுவதையும் உறுதிசெய்யவேண்டும்," என்று திரு மசகோஸ் குறிப்பிட்டார்.

