மதுபோதையில் டாக்சி
ஓட்டியபோது தூங்கியவருக்குச் சிறை
மதுபோதையில் டாக்சியை ஓட்டிக்கொண்டிருந்தபோது தூங்கிய ஓட்டுநருக்கு 12 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
45 வயது லிம் சீ யோங்கிற்கு வாகனம் ஓட்டுவதற்கு நான்காண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு சிலேத்தார் விரைவுச்சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. மதுபோதையில் டாக்சியை ஓட்டிக்கொண்டிருந்தபோது தூங்கியதோடு லிம் ஒரு வாகனத்தை மோதினார்.
அந்த வாகனத்தைத் தனது டாக்சி மோதியதைப் பாதிக்கப்பட்ட ஓட்டுநரிடம் ஒப்புக்கொள்ளாத லிம் சம்பவ இடத்தைவிட்டுப் புறப்பட்டார்.
மோதப்பட்ட வாகனத்தின் ஓட்டுநரின் கழுத்து, மேல் முதுகு, இடது தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
$9.7 மி. மதிப்புள்ள மோசடிச் செயலில் ஈடுபட்ட ஆடவருக்குச் சிறை
கட்டுமான நிறுவனம் ஒன்று சம்பந்தப்பட்ட மோசடிச் செயலுடன் தனக்குத் தொடர்பிருந்ததாக வோங் முன் கின் எனும் ஆடவர் ஒப்புக்கொண்டுள்ளார். 9.7 மில்லியன் வெள்ளியைப் பறிக்கும் நோக்குடன் 'சிவில் டெக்' எனும் அந்நிறுவனம் ஏமாற்றப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்த விவகாரத்தின் தொடர்பில் தற்போது 53 வயதாகும் வோங்கிற்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் தொடர்பில் தன் மீது சுமத்தப்பட்டிருந்த ஐந்து குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கில் 12 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களில் வோங், நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர்.
$382,000 மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்; 100 பேர் கைது
போதைப் பொருள் குற்றங்களைப் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் 100 பேரை மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது. இம்மாதம் 14ஆம் தேதிக்கும் 23ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூர் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 382,000 வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன (படம்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு).
சுவா சூ காங், மெக்பர்சன், செங்காங், தெம்பனிஸ் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.கைதானோரில் ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்த 16 வயது ஆடவர்.
பூன் லேயில் 57 வயது ஆடவரைக் கைதுசெய்ய அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அவரின் வீட்டிற்குள் நுழையவேண்டியிருந்தது. சிங்கப்பூரரான அவர், அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு இணங்க நடந்துகொள்ள மறுத்தார்.

