சிகிச்சைக்காக கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குச் சென்றபோது தான் நான்கு மணிநேரம் வரை காத்திருக்கவேண்டியிருந்ததாகவும் அதற்குப் பிறகு தனது வயிற்றில் இருந்த சிசு கலைந்துபோனதாகவும் சொன்ன பெண் மீது காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் தவறான தகவலைத் தெரியப்படுத்தியுள்ளதாக கேகே மருத்துவமனை புகார் தந்துள்ளது.
அச்சம்பவம் குறித்து இணையத்தில் பதிவிடப்பட்ட தகவல்கள் தவறானவை என்று கேகே மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் சியா கூறினார். அந்தப் பெண் கூறியதும் உண்மையில் நடந்த நிகழ்வுகளும் மாறுபடுவதாக அவர் குறிப்பிட்டார்.
"அப்படி ஏதும் நடக்கவில்லை என்று எங்களால் உறுதியாகச் சொல்லமுடியும். அதனால் நாங்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளோம்," என்று பேராசிரியர் சியா சொன்னார்.
பிற்பகல் இரண்டு மணிக்கு கேகே மருத்துவமனைக்குச் சென்றதாக அந்தப் பெண் கூறியிருந்தார். அதற்குப் பிறகு வாகனத்திலிருந்து பிறரை இறக்கிவிடும் பகுதியில் தான் காக்கவைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
மாலை ஐந்து மணிக்குத் தனது உடலிலிருந்து ரத்தம் வெளியானதாகவும் அப்படிப்பட்ட சூழலிலும் தனக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர் குறைகூறினார். சுமார் ஆறு மணிக்கு மருத்துவரைப் பார்த்தபோது வயிற்றில் இருந்த சிசு கலைந்துபோனதாக அவர் சொன்னார்.
சுகாதாரப் பாராமரிப்புத் துறையில் இது அனைவருக்கும் முக்கியமான ஒரு தருணம் என்று பேராசிரியர் சியா குறிப்பிட்டார். முடிந்தவரை எல்லா நோயாளிகளையும் தனது மருத்துவமனை கவனித்துக்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார். எல்லா கருத்துகளையும் தாங்கள் வரவேற்றாலும் பொய்த் தகவல்கள் இடம்பெறும்போது அவற்றைச் சரிவரக் கவனிக்கவேண்டும் என்பதைப் பேராசிரியர் சியா சுட்டினார்.

