அடுத்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1,500 தொழில்நுட்ப ஊழியர்களை ஓசிபிசி வங்கி வேலையில் அமர்த்த இருக்கிறது. மின்னிலக்க உருமாற்றம், வர்த்தக வளர்ச்சி ஆகியவற்றை விரைவுப்படுத்தும் நோக்கில் ஓசிபிசி இந்த நடவடிக்கையை எடுக்கிறது.
செயலி மேம்பாட்டாளர்கள், இணையப் பாதுகாப்பு நிபுணர்கள், தரவு விஞ்ஞானிகள் ஆகியோர் வேலையில் அமர்த்தப்படுவர்.
சீனா, ஹாங்காங், இந்தோனீசியா, மலேசியா ஆகிய நாடுகளிலும் ஓசிபிசி இயங்கி வருகிறது. புதிதாக வேலைக்கு எடுக்கப்படுவோரில் சிலர் இந்த நாடுகளுக்கும் அனுப்பப்படுவர்.
ஆனால் பெரும்பாலானோர் சிங்கப்பூரில் வேலை செய்வர் என்று ஓசிபிசி வங்கியின் தலைமை செயலாக்க அதிகாரி லிம் கியாங் டோங் தெரிவித்தார்.
150 தொழில்நுட்ப ஊழியர்களை வேலைக்கு எடுக்கப்போவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டிபிஎஸ் வங்கி தெரிவித்திருந்தது. அத்துடன் 140 பெண்களையும் பணியில் அமர்த்தப் போவதாகவும் அது கூறியது.
தொழில்நுட்பத் திறன் கொண்ட ஊழியர்களை வேலையில் அமர்த்த நிறுவனங்களிடையிலான போட்டி சூடுபிடிக்கிறது.
மற்ற பிரிவுகளில் உள்ள தனது ஊழியர்கள் தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற ஓசிபிசி ஏற்பாடுகள் செய்துள்ளது. அதனை அடுத்து அவர்கள் வங்கியின் தொழில்நுட்பக் குழுக்களில் சேரலாம் என்று அது கூறியது.

