இன்னமும் பயம் இருந்தாலும் அப்பாடா என்று கொஞ்சம் நிம்மதி பெருமூச்சுவிடும் நேரம் கைகூடி வருகிறது. பெரிய கண்டத்தில் இருந்து தப்பிவிட்டோம், இனி எப்படியும் பிழைத்துவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்படும் அளவுக்குச் சூழ்நிலைகள், நிலவரங்கள் திரும்புகின்றன.
கொரோனா பிடியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிக்கி, வாழும் வழியே மாறிப்போய், உற்றார், உறவினரை, நண்பர்களைப் பார்க்க முடியாமல், பழக முடியாமல், வேலைக்குப் போக முடியாமல், வெளியே தலைகாட்டக்கூட முடியாமல் நாம் பட்ட சிரமம் கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாதது.
ஒரு பக்கம் வீட்டுக்கு இழப்பு; மறுபக்கம் நாட்டுக்கு இழப்பு, தனிப்பட்டவர்களுக்கு இழப்பு, நிறுவனங்களுக்கு இழப்பு, வேலை இழப்பு, பொருளி யல் இழப்பு, மனநல இழப்பு என்று பல இழப்புகளை நாம் சந்தித்தாலும் மக்களும் நிறுவனங்களும் மற்ற அனைவரும் புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக, அரசாங்கத்துடன் சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட்டதன் காரணமாக இன்று நிலைமை மாறி வருகிறது.
உலகைவிட்டு, நம்மைவிட்டு கொவிட்-19 அறவே ஒழியாது என்ற நிலையில் அதோடுதான் வாழ வேண்டிய நிலைக்கு மனரீதியிலும் படிப்படியாக மாற நாம் தயாராகிவிட்டோம்.
கொரோனாவுக்கு எதிரான போரில் விவேகமாக நடந்துகொண்டோம். ஒரே ஓர் ஆயுதமாக நமக்குக் கிடைத்த தடுப்பூசியை உலகம் வியக்கும் அளவுக்குச் செம்மையாகப் பயன்படுத்திக்கொண்டோம். சுகாதாரப் பராமரிப்பு ஆற்றலை வலுவாக்கினோம். அதை திறம்பட நிர்வகித்தோம். சுகாதார பராமரிப்புத் துறை ஊழியர்கள் தங்களையே அர்ப்பணித்தார்கள். பாதிப்பு, மரணங்களைக் குறைத்துக்கொண்டோம்.
மாறி மாறி நடப்புக்கு வந்த பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப நிறுவனங்களும் உடனுக்குடன் மாறிக்கொண்டதால் விநியோகக் கட்டமைப்பு துண்டிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது. அரசாங்கம் ஏராளமான உதவி, ஆதரவு, அரவணைப்பு, உறுதுணைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
இவற்றின் விளைவாக ஒரு திருப்புமுனைக்கு நாம் வந்துள்ளோம். நாம் மகிழ்ந்து பழையபடி வாழும் காலம் திரும்புகிறது. இதைக் கெடுத்து இறங்குமுகபாதையில் நாம் இறங்கிவிடக்கூடாது.
ஆகையால் தொடர்ந்து எப்படி செயல்படுவது என்பதைச் சிந்தித்து அளவறிந்து, அதே வேளையில் திட்டவட்டமான நடவடிக்கைகளை அமலாக்க சிங்கப்பூர் இப்போது ஆயத்தமாகி வருகிறது.
கொரோனா 2020ல் தலை எடுத்தபோதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்த இருக்கிறது.
பொதுமக்கள், வரும் செவ்வாய்க்கிழமை முதல் 10 பேர் வரை கூடி, கலந்துறவாடி, வெளியே சாப்பிட்டு மகிழலாம். நீங்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாயமும் இனி இருக்காது. விரும்பினால் அதை நீங்கள் அணியலாம். இருந்தாலும், வகுப்பறை, கூடங்கள் போன்ற உள்ளிடங்களில் முகக்கவசம் அணிய வேண்டிய நிலை இருக்கும்.
வீட்டில் இருந்து வேலைபார்க்கக்கூடிய ஊழியர்களில் 75% வரைப்பட்டவர்கள் வேலையிடம் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். பெரிய பெரிய நிகழ்ச்சிகள், மேடைக்கலை நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்கின்றன. இரண்டாண்டு காலமாக முடங்கியே கிடந்த மேடைக் கலைஞர்களுக்கு இதன் விளைவாக மீண்டும் புத்துயிர் கிடைக்க வழி ஏற்படும்.
இரவு 10.30க்குப் பிறகும் மதுபான விற்பனையும் அனுமதிக்கப்படும். இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் சிங்கப்பூர் வர ஏப்ரல் 1 முதல் அனுமதி கிடைக்கும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப்பாதைத் திட்டத்தின் கீழ் (விடிஎல்) விமானங்கள் செயல்படாது. முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் தாராளமாகச் சென்று வரலாம்.
அவர்களுக்குப் பரிசோதனையோ, தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையோ இனி இருக்காது. பக்கத்து நாடுகளான சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் சமூக, பொருளியல் நடவடிக்கைகள், மக்களுக்கு இடைப்பட்ட உறவுகள் எல்லாம் மீண்டும் சூடுபிடிக்கும்.
இரு நாட்டு மக்களும் இரண்டாண்டு காலமாக ஏங்கிக் கிடந்த, காத்துக்கிடந்த காலம் போய் விரும்பிய நல்ல காலம் திரும்பும்.
இவை எல்லாம் எந்த அளவுக்குப் பொருளியல் ரீதியிலும் மன ரீதியிலும் சிங்கப்பூரர்களிடம் மகிழ்ச்சி யையும் மாற்றத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதை வர்ணிக்க இயலவில்லை. புதிய உற்சாகம், புதுப்பொலிவு புதிய நம்பிக்கையை இவை ஏற்படுத்தித் தரும் என்பது திண்ணம்.
சிங்கப்பூர், கடந்த இரண்டாண்டுகளில் கொரோ னாவுக்கு எதிராக அரங்கேற்றிய போராட்டத்தில் பல அனுகூலங்களைச் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறது. முதன்முதலாக கொரோனா தலைகாட்டிய காலத்தில் இருந்ததைவிட இப்போது நாடு, சுகாதாரப் பராமரிப்பு முறை, மக்கள் எல்லாரும், எவ்வளவோ சிறந்த நிலையில் மேம்பட்டு இருக்கிறார்கள். இனி ஒரு முறை கிருமி தலைதூக்கினால் அதை திறம்பட சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை இப்போது பலமடைந்துள்ளது.
மக்களும் அரசாங்கமும் ஒரே நாடாகச் சேர்ந்து செயல்பட்டதன் விளைவாக வராது வந்த மாமணி போல் வந்திருக்கும் இந்த மகிழ்ச்சிகரமான நிலையை அனுபவிக்கப்போகும் நாம், அதே வேளையில் சில நிலவரங்களைக் கருத்தில்கொள்ள வேண்டும். இது மிக முக்கியமானது.
கொவிட்-19 கிருமி இன்னமும் நம்மைவிட்டு முற்றிலும் அகலவில்லை என்பதை நாம் அனைவரும் எப்போதுமே நினைவில் கொள்ள வேண்டும். இப்போதுகூட கிருமித்தொற்றுக்கு அன்றாடம் பலரும் ஆளாகி வருகிறார்கள் என்பதை மறக்கக்கூடாது.
உலகம் இதுவரை சந்தித்திராத புதுமையான கிருமியாக கொவிட்-19 இருக்கிறது. எந்த நேரத்திலும் எந்த சூழலிலும் அது உருமாறி புதிய வடிவில் தலையெடுக்கும் ஆபத்தும் அகலவில்லை என்பதை சிங்கப்பூரர்கள் அலட்சியப்படுத்தக்கூடாது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை அடுத்து, வழக்கநிலை வந்துவிட்டதாக நினைத்து, பெரும் உற்சாகம் பீறிட்டு, மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டாடி கலந்துறவாடி பயணம் மேற் கொண்டு மகிழக்கூடும். இதில் தவறில்லை.
ஆனாலும் ஒவ்வொருவருமே கொரோனாவின் தன்மைகளை மனதில் கொண்டு சமூக ரீதியிலும் தனிப்பட்ட முறையிலும் பொறுப்புடன், விவேகமாக நடந்துகொள்ள வேண்டும். இப்படி ஒரே நாடாக ஒற்றுமையாக புரிந்துணர்வுடன் செயல்படும்பட்சத்தில் எந்தக் கிருமியையும் வீழ்த்திவிடலாம் என்ற நம்பி பிக்கையுடன் நாம் நடைபோடலாம்.

