மனஉளைச்சல் என்பது இப்போது வாழ்க்கை வழியாகிவிட்டது. உதவி நாடுவதில் சிறாருக்கு அல்லது பெற்றோருக்கு ஏற்படக்கூடிய மனச்சங்கடத்தை மனநலம் பற்றிய ஒளிவுமறைவு இல்லாத, ஆதரவுகரமான கலந்துரையாடல்கள் மூலம் போக்கலாம்.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் திரு சான் நேற்று பெற்றோர், பள்ளி ஊழியர்களிடையே ஸூம் செயலி மூலம் பேசினார். பல அம்சங்களில் உலகம் வேகமாக பரிணமித்து வருகிறது. மாறி வருகிறது. அதனால் நமக்கு ஏற்படக்கூடிய அவசர அவசியங்கள் ஏராளமாக உள்ளன என்பது நமக்குத் தெரியும்.
இத்தகைய தேவைகள் அதிகரித்து இருக்கின்றன. எதிர்பார்ப்புகளும் கூடி இருக்கின்றன. மனஉளைச்சல் இல்லாத ஒரு சூழலில் வாழ்வோம் என்ற ஓர் எதிர்பார்ப்பு சாத்தியமற்ற ஒன்றாக தெரிகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மனநலம் பற்றிய கலந்துரையாடல் மேம்பட பெற்றோர் ஆதரவுக் குழுக்கள் உதவவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு சக பெற்றோருக்கு ஆதரவு அளித்து அவை உதவ முடியும் என்றார் அவர்.
அதேபோல, மாணவர்களும் சக மாணவர்களின் ஆதரவு ஏற்பாடு ஒன்றின் மூலம் பலனடையலாம் என்று திரு சான் தெரிவித்தார்.
பெற்றோர் ஆதரவுக் குழுக்கள் என்பவை தொண்டூழிய பெற்றோர்களை உறுப்பினராகக் கொண்டிருக்கும் அமைப்புகள். இவர்கள் தங்கள் பிள்ளையின் கல்வியில் தீவிர பங்காற்ற விரும்புகிறார்கள். ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் ஆதரவு தர சொந்தமாகக் குழு இருக்கிறது.
பெற்றோர் குழுக்களைச் சேர்ந்தவர்கள், தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் நிறைந்திருந்த 700 பேருக்கும் மேற்பட்டவர்களிடையே திரு சான் உரையாற்றினார். கல்வி துணை அமைச்சர் சுன் ஷுவெலிங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மாணவர்களின் கவலைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவற்றைப் போக்கும் நடைமுறையில் பெற்றோரை எப்படி ஈடுபடுத்தலாம் என்பது பற்றி ஆராயப்படும் என்றும் திருவாட்டி சுன் கூறினார்.
சுகாதார மேம்பாட்டுக் கழகம் இப்போது மேற்கொண்டு வரும் மனநல இயக்கத்தைப் பற்றி குறிப்பிட்ட திருவாட்டி சுன், அந்த இயக்கம் மக்கள் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய உதவி வழிகளைப் பற்றி எடுத்துக்கூறி உத்தரவாதம் அளிப்பதாகத் தெரிவித்தார்.

