சிங்கப்பூருக்கு பயங்கரவாத மிரட்டல் இன்னமும் அதிகமாக இருக்கிறது. வெளிநாடுகளில் நிகழும் சம்பவங்கள் நம் உள்நாட்டுப் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியுமென உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்திய முஸ்லிம் சமூக சேவை சங்கத்தின் இளையர் கருத்தரங்கில் உரையாற்றிய இணைப் பேராசிரியருமான அவர், உக்ரேனில் இப்போது நிகழும் நெருக்கடியை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.
அங்கு கணிக்க முடியாத சூழ்நிலை தொடர்ந்து இருந்து வருகிறது என்று தெரிவித்த துணை அமைச்சர், உக்ரேனில் ரஷ்யா படையெடுத்ததன் தொடர்பில் சிங்கப்பூர் தன்னுடைய நிலையைத் தெள்ளத்தெளிவாக தெரியப்படுத்தி இருப்பதைச் சுட்டினார்.
உக்ரேன் மீது ரஷ்யா படைஎடுத்ததை சிங்கப்பூர் வலுவாகக் கண்டித்து இருக்கிறது. உக்ரேன் போரில் சிங்கப்பூரர்கள் யாராவது பங்கெடுத்தால் அது சட்டத்துக்குப் புறம்பானது என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், நண்பர்கள் யாராவது இதுபற்றி கேட்டால் இந்த நிலையை அவர்களிடம் தெரியப்படுத்துமாறு இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.
இருந்தாலும் உக்ரேனியர்களுக்கு உதவ விரும்புவோர் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சட்டபூர்வமான வழிகள் மூலம் உதவலாம் என்று துணை அமைச்சர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் முஸ்லிம் சமூகம் குறிப்பாக இந்திய முஸ்லிம் சமூகம் மேம்பட இந்திய முஸ்லிம் சமூகச் சேவை சங்கம் ஆற்றிவரும் நல்ல பணிகளைப் பாராட்டினார்.

