2024ஆம் ஆண்டுவாக்கில் நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டுக்கு ஊழியர் கோரிக்கை விடுத்தால் அதனை முதலாளிகள் நியாயமாகவும் முறையாகவும் கவனமாகவும் பரிசீலிக்க வேண்டும்.
இத்தகைய ஏற்பாட்டுக்கான புதிய வழிகாட்டி இதனை வலியுறுத்துகிறது.
ஆனால் முதலாளிகள் தங்களுடயை வர்த்தக தேவைகளுக்கு ஏற்ப அதனை அங்கீகரிக்கவோ, நிராகரிக்கவோ முடியும்.
இந்த இடைக்காலத்தில் முதலாளிகள் தாங்களாகவே முன்வந்து முத்தரப்பு பங்காளிகளுக்கிடையே நீக்குப்போக்கான வேலை நடை முறைகள் கடைப்பிடிப்பதை அரசாங்கம் அதிகரிக்க எண்ணம் கொண்டு உள்ளது. தற்போது அனைத்து ஊழியர்களில் 27 விழுக்காட்டினர் நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டின் கீழ் உள்ளனர். இதனை இவ்வாண்டு இறுதிக்குள் 40 விழுக்காடாக அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
வேலை-வாழ்க்கை சமநிலைக்கு ஆதரவான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பெற்றோர் விடுப்பைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படும். இதற்கு பொதுச் சேவைப் பிரிவு முன்னுதாரணமாக இருக்கும்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விளக்கம் கேட்டதற்கு பதில் அளித்த மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், கொள்ளைநோய்க்குப் பிந்திய காலகட்டத்தில் வேலையிடங்களில் இலகுவான வேலை ஏற்பாடு (எஃப்டபிள்யூஏ) முக்கிய அம்சமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
"இது, முதலாளி-ஊழியர் இடையிலான இருதரப்பு வெற்றியைக் குறிக்கிறது," என்றார்.
"நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு ஆண், பெண் இருவருக்கும் பலனளிக்கும். மேலும் பராமரிப்பு பொறுப்பில் உள்ளவர்கள் தொடர்ந்து வேலை செய்யவோ அல்லது வேலைக்குத் திரும்பவோ முடியும். இவ்வழியில் முதலாளிகள் அதிக திறனாளர்களைப் பயன்படுத்தலாம். மேலும் நீக்குப்போக்கான ஏற்பாடு களால் முதலாளிகள் தங்களுடைய வர்த்தகங்களை எதிர்காலத்திற்கு ஏற்ப உருமாற்றவும் சிறந்த திறனாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும் முடியும்," என்று அமைச்சர் தெரிவித்தார்.
25 முதல் 64 வயது வரையிலான ஊழியர்களில் பத்தில் ஒன்பது பேர் 2020ல் நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டை பெற்றனர். இது, 2014ல் பத்தில் ஆறு ஊழியர்களாக இருந்தது என்று நேற்று வெளியிடப்பட்ட மாதர் மேம்பாட்டு அறிக்கை தெரிவித்தது.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டுக்கான முத்தரப்புக் குழு, அதனை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து வழிகாட்டுகிறது.

