கி.ஜனார்த்தனன்
கட்டுப்பாடுகளின் தளர்வு குறித்து சிங்கப்பூரின் உணவக உரிமையாளர்கள், நீண்ட நாள் கனவு நிறைவேறி இருப்பதாகத தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.
கடந்த வாரம் வெளிவந்த பிரத மரின் அறிவிப்புக்குப் பிறகு, கடந்த வாரயிறுதிக்கான முன் பதிவுகளைச் செய்திருந்தவர்கள் செவ்வாய்க்கிழமைக்கு பிறகு மாற்றியதாக முத்துஸ் கறி உணவகத்தின் உரிமையாளர் காசி விஷ்வநாத் தெரிவித்தார்.
முன்பதிவு செய்திருந்தவர்கள் பலர் 10 பேர் வரை தங்களது முன்பதிவுகளை மாற்றியதாகவும் அவர் கூறினார். "முன்னைய விதிமுறைகளால் நாங்கள் 25 மேசைகளை எங்கள் கிடங்கிற்குக் கொண்டு சென்றோம். அந்த மேசைகளில் 50 விழுக்காடு மேசைகளை மீண்டும் நம் உண வகங்களுக்குக் கொண்டு வந்து உள்ளோம்," என்றார் அவர்.
முஸ்லிம்களுக்கான நோன்பு மாதம் வருகிற சமயத்தில் குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு உண்பதற்கு புதிய விதிமுறை வகை செய்யும் என்று சகுந்தலாஸ் உணவகத்தின் உரிமையாளர் மாதவன் ஆதிபால கிருஷ்ணன், 52, தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமைக்கான முன்பதிவு இதனால் 20 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காயத்திரி உணவக உரிமையாளர் ச.மகேந்திரன், 10 பேர் கூட அனுமதிக்கப்படும் நிலை கிட்டத்தட்ட கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முந்திய நிலையே என்று கூறினார். தங்களுக்குச் சொந்தமான 'பாட்டம்ஸ் அப்' கிளையில் இரவு 10.30 மணிக்கு மேல் மதுபானங்களை அனுமதிக்கப்படு வதாலும் வர்த்தகம் மேன்மேலும் முன்னேற்றம் அடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேசை முறையையே மாற்றி அமைக்க வேண்டி இருந்ததாகவும் நள்ளிரவு வரை உணவு மற்றும் மதுபானங்களைப் பரிமாறு வதற்கும் ஊழியர்களைத் தயார் படுத்தியுள்ளதாகக் கூறிய 'தி கேவர்ன்' உரிமையாளர் வி ராமு, 46 ஊழியர்களை மேலும் சேர்க்கத் திட்டமிடுகிறார்.
ஆயினும், வேறு சிலர், தற்போதைய விதிமுறைகளைத் தொடரப்போவதாகக் கூறினர். பத்து இருக்கைகளைக் கொண்ட மேசைகள் உள்ள இடத்திற்கே நுழைவு வசதி (point of entry) தேவைப்படுகிறது என 'அலாடீன்ஸ் காசல்' உணவுக்கடையின் நிர்வாகி கார்த்திகேயன் அருணநீதி, 36, தெரிவித்தார். "கண்காணிப்புகளை அதிகப் படுத்தத் தேவையான ஊழியர்கள் என்னிடம் போதிய எண்ணிக்கையில் இல்லை," என்று அவர் கூறினார்.
அதிகம் பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது நல்லது என்றாலும் மேசைகளுக்கு இடையே தொடர்ந்து பாதுகாப்பு இடைவெளியை உறுதி செய்வது மேலும் கடினமாக இருக்கும் என்று பாய் பிரியாணியின் உரிமையாளர் காதர் முகைதீன் தெரிவத்தார்.
பத்து பேருக்கான வசதியை தாம் தற்போதைக்கு ஏற்பாடு செய்யப்போவதில்லை என்றும் ஏற்கெனவே இருந்த கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பின்பற்றி வந்தால் அது அனைவருக்குமே நல்லது என்றும் அவர் கருதுகிறார்.

