சிங்கப்பூரின் சட்டச் சேவை ஆணையம், திருவாட்டி டேஃப்னி ஹோங்கை (படம்) அரசாங்க துணைத் தலைமை வழக்கறிஞராக நியமித்திருக்கிறது.
வரும் ஏப்ரல் முதல் தேதி அவர் பொறுப்பேற்றுக்கொள்வார் என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகும் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் அனைத்துலக விவகாரங்கள் பிரிவுக்கான தலைமை இயக்கு நராகவும் அவர் தொடர்ந்து செயல்படுவார்.
திருவாட்டி ஹோங், 1991ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளநிலைப் பட்டத்தையும், 1995ல் முதுநிலைப் பட்டத்தையும் பெற்ற அவர், கீழ்நீதிமன்றத்தில் துணைநிலைப் பதிவாளராகப் பணியைத் தொடங்கினார். படிப்படியாக நீதிபதி, மாவட்ட நீதிபதி ஆகிய பதவிகளை வகித்தார்.
2004ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் உதவிப் பதிவாளராகச் சேவையாற்றிய திருவாட்டி ஹோங், 2006ல் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் அனைத்துலக விவகாரப் பிரிவில் அரசாங்கத்தின் மூத்த துணை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2016ல் அந்தப் பிரிவின் தலைமை இயக்குநர் பொறுப்பை ஏற்றார்.
பொதுச் சேவையில் அவரது சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி சென்ற ஆண்டு திருவாட்டி டேஃப்னி ஹோங்கிற்கு பொது நிர்வாகத் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

