சிங்கப்பூரில் பயனீட்டுச் சேவை வழங்கும் 'எஸ்பி' குழுமம், வியட்னாமில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேற்கூரைகளில் பொருத்தப்படும் சூரியசக்தித் தகடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் சிஜே ஓஎன்எஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படவிருக்கிறது.
சிஜே ஓஎன்எஸ் நிறுவனம் தென்கொரியாவின் சிஜே ஆலிவ்நெட்வர்க்ஸ் நிறுவனத்தின் வியட்னாமியப் பிரிவாகும்.
வியட்னாமில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சூரியமின்சக்தித் தீர்வுகளை வகுப்பதில், எஸ்பி குழுமம், சிஜே ஓஎன்எஸ் இரண்டும் அவற்றின் நிபுணத்துவம், அனுபவம், வளங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும்.
2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை எட்டுவதற்கான வியட்னாமின் பசுமை இலக்குகளுக்கு உதவுவதும் 2030க்குள் நாட்டின் காற்றாலை, சூரியமின்சக்தித் தயாரிப்பு இலக்குகளை இரண்டு மடங்காக்க வகைசெய்வதும் புதிய பங்காளித்துவத்தின் நோக்கம்.
இந்தத் திட்டத்தின்கீழ், முதலாவதாக சிஜே வினா அக்ரி எனும் வேளாண் உற்பத்தித் தொழிற்சாலையின் மேற்கூரையில் சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்படும்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் செயல்படத் தொடங்கும் இந்த மின்தயாரிப்புத் திட்டம், ஆண்டுக்கு 3,577 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும்.
இதன்மூலம், தொழிற்சாலையின் மின்சாரத் தேவையில் 20 விழுக்காட்டைப் பூர்த்திசெய்ய இயலும். இதனால் ஆண்டுக்கு 3,500 டன் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும் என்று கூறப்பட்டது.

