எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கம்ஃபர்ட்டெல்குரோ தற்காலிக நடவடிக்கை; ஏப்ரல் 4 முதல் நடப்பிற்கு வருகிறது
சிங்கப்பூரின் ஆகப் பெரிய டாக்சி சேவை நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ, பயணத் தொலைவுக் கட்டணத்தை தற்காலிகமாக ஒரு காசு உயர்த்தியுள்ளது.
இந்த மாற்றம் அடுத்த திங்கட்கிழமை முதல் நடப்பிற்கு வரவிருக்கிறது.
அண்மைய வாரங்களாக எரிபொருள் விலை உயர்ந்து வருவதன் எதிரொலியாக இந்தத் தற்காலிகக் கட்டண உயர்வு நடவடிக்கை இடம்பெறுவதாக கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் ஓர் அறிக்கை வழியாக நேற்று தெரிவித்தது.
இம்மாதம் 1ஆம் தேதி முதல் டாக்சி பயணக் கட்டண உயர்வை அந்நிறுவனம் நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இப்போதைக்கு, பயணத் தொலைவு மற்றும் காத்திருப்பு நேரக் கட்டணங்களானது வழக்கமான கம்ஃபர்ட் டாக்சிகளுக்கு 24 காசாகவும் 'லிமோசின்' டாக்சிகளுக்கு 33 காசாகவும் இருக்கின்றன.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 4ஆம் தேதியிலிருந்து இந்தக் கட்டணங்கள் முறையே 25 காசாகவும் 34 காசாகவும் உயரும்.
முதல் பத்து கிலோமீட்டர் தொலைவிற்கு ஒவ்வொரு 400 மீட்டருக்கும் அதன்பின் ஒவ்வொரு 350 மீட்டருக்கும் ஒவ்வொரு 45 நொடிகள் அல்லது அதற்குக் குறைவான காத்திருப்பு நேரத்திற்கும் இந்தக் கட்டணம் பொருந்தும்.
இந்தத் தற்காலிகக் கட்டண உயர்வால் பத்து கிலோமீட்டர் தொலைவு டாக்சியில் பயணம் செய்வதற்குக் கூடுதலாக 32 காசு செலவிட வேண்டியிருக்கும் என்றும் கம்ஃபர்ட்டெல்குரோ குறிப்பிட்டது.
இதனையடுத்து, நாளொன்றுக்கு 10 முதல் 12 பயணங்களை மேற்கொள்ளும் கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி ஓட்டுநர்கள் கூடுதலாக $3.20 முதல் $3.84 வரை வருமானம் ஈட்டுவர்.
இது அவர்கள் எரிபொருளுக்காகக் கூடுதலாகச் செலவழிக்கும் தொகையைச் சற்றுக் குறைக்க உதவும். கடந்த மாதத்தில் அவர்கள் எரிபொருளுக்காக நாளொன்றுக்கு $3.55 முதல் $13.50 வரை கூடுதலாகச் செலவழிக்க வேண்டி இருந்தது என்று கம்ஃபர்ட்டெல்குரோ கூறியது.
ஓட்டுநர்களின் கருத்துகளை அறிந்தபின், கவனமான பரிசீலனைக்குப் பிறகே இந்தத் தற்காலிகக் கட்டண உயர்வு அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
அத்துடன், இவ்வாண்டு மே மாத இறுதியில் இந்தத் தற்காலிகக் கட்டண உயர்வு குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்றும் எரிபொருள் விலை குறைந்தால் அது மீட்டுக்கொள்ளப்படும் என்றும் கம்ஃபர்ட்டெல்குரோ தெரிவித்து இருக்கிறது.
எரிபொருள் விலை உயர்வைச் சமாளிக்க தன் ஓட்டுநர்களுக்குக் கைகொடுக்கும் வகையில், $90 மதிப்பிலான ஒருமுறை வாடகைக் கழிவை மேலும் நீட்டிப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
முன்னதாக, எரிபொருள் விலை உயர்வு காரணமாக குறைந்தது மூன்று தனியார் வாடகை கார் சேவை வழங்குநர்களும் தற்காலிகமாக ஓட்டுநர் கட்டண உயர்வுத் திட்டங்களை அறிவித்திருந்தன.
கிராப் நிறுவனம், ஸ்டாண்டர்ட் டாக்சி சேவை தவிர்த்து தனது அனைத்துச் சேவைகளுக்கும் 50 காசு கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்தத் தற்காலிக உயர்வு ஏப்ரல் 1 முதல் மே 31 வரை நடப்பிலிருக்கும்.
அதுபோல, 'தடா', 'கோஜெக்' நிறுவனங்களும் 50 முதல் 80 காசு வரை கட்டணங்களைத் தற்காலிகமாக உயர்த்தி அறிவித்துள்ளன.