நண்பர் அல்லது அன்புக்குரியவர் ஒருவர் தமது உயிரை மாய்த்துக்கொள்வது பற்றிச் சிந்திப்பதாக இருந்தால், அதனைப் பல்வேறு எச்சரிக்கை அறிகுறிகள் காண்பித்துவிடும் என்று மனநலக் கழகத்தின் அவசர, நெருக்கடிகாலப் பராமரிப்புத் துறையின் தலைவரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் ஜேரட் இங் தெரிவித்துள்ளார்.
தங்களால் இனியும் வாழ முடியாது அல்லது வாழ விருப்பமில்லை எனச் சமூக ஊடகங்களில் பதிவிடுவது அல்லது உயரமான கட்டடங்களில் பிறர் நின்றிருப்பது போன்ற படங்களைத் திடீரெனப் பதிவேற்றம் செய்வது உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
அத்துடன், உயிரை மாய்த்துக்கொள்வது பற்றிச் சிந்திப்பவர் விடைபெறுவது போன்ற கடிதங்களை எழுதி அனுப்பலாம் அல்லது இதுநாள்வரை அரும்பொருளாகத் தாங்கள் பாதுகாத்து வந்தவற்றைப் பிறருக்கு அளிக்கலாம்.
"குடும்பத்தினராலும் அன்புக்குரியவர்களாலும் மட்டுமே இத்தகைய அறிகுறிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவ முடியும்," என்றார் டாக்டர் இங்.
மனநலக் கழகமும் தெமாசெக் அறநிறுவனமும் இணைந்து, மனநலம் தொடர்பில் நடத்திவரும் இணையவழிக் கருத்தரங்குத் தொடரில் பங்கேற்றுப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
நிபுணத்துவப் பயிற்சி இல்லாத பாமரர்களும் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் நண்பர்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் உதவ முடியும் என்றார் தாய்லாந்து பொதுச் சுகாதார அமைச்சின் சோம்தத் சாவ்பிராயா உளவியல் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பட்டனோன் குவான்சனித்.
"அக்கறை கொள்ளுங்கள், பரிவு காட்டுங்கள், உரிய உதவி அல்லது சிகிச்சையை நாடுமாறு நண்பருக்கு ஆலோசனை கூறுங்கள்," என்றார் டாக்டர் குவான்சனித்.
நிலைமை அவசரம் எனில் காவல்துறையினரின் உதவியை நாடலாம் என்று டாக்டர் இங் குறிப்பிட்டார்.
காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, சம்பந்தப்பட்டவவருக்கு உரிய அமைப்பின் உதவி கிடைக்கும்படி செய்யக்கூடும்.
மற்ற உலக நாடுகளைப்போல, சிங்கப்பூரிலும் வெவ்வேறு வயதுப் பிரிவினரைப் பொறுத்து, உயிரை மாய்த்துக்கொள்வதற்கான முக்கியக் காரணங்கள் வெவ்வேறாக உள்ளன என்றார் டாக்டர் இங்.
இளையர்களைப் பொறுத்தமட்டில், உறவுமுறை மற்றும் அடையாளம் சார்ந்த பிரச்சினைகள் முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன. குடும்பப் பிரச்சினைகளால் அல்லது திருமணம் சார்ந்து தங்களின் பெற்றோருக்கு இடையிலான பிரச்சினைகளாலும் அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படலாம்.
பெரியவர்களைப் பொறுத்தமட்டில், உறவுமுறை, நிதி அல்லது வேலை தொடர்பான பிரச்சினைகளே உயிர்மாய்ப்பிற்கான முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. தனிமை, செயல்பட முடியாமை, முதுமைக்கால நோய்கள் போன்ற காரணங்களால் முதியவர்களும் உயிரை மாய்த்துக்கொள்வது பற்றிச் சிந்திக்கக்கூடும்.
உலகளாவிய தரவுகளின்படி, உயிர்மாய்ப்பு முயற்சியில் இறங்குவோரில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர் ஏதோ ஒரு வேகத்தில் அவ்வாறு செய்யத் துணிவதாகவும் எஞ்சிய 40 விழுக்காட்டினர் திட்டமிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயல்வதாகவும் டாக்டர் இங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கெனப் பிரத்தியேகமாக அத்தகைய தரவுகள் ஏதும் இல்லை என்றும் அவர் சொன்னார்.
உயிர்மாய்ப்பைத் தடுக்க, பல்வேறு நிலைகளில் பல நடவடிக்கைகள் ஏற்கெனவே நடப்பில் இருந்து வருவதையும் டாக்டர் இங் சுட்டிக்காட்டினார்.
பள்ளி சார்ந்த உளவியல் நல்வாழ்வு மற்றும் திறன் பயிற்சித் திட்டங்கள், இடரில் உள்ளோரை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள், பொது விழிப்புணர்வுப் பிரசாரங்கள், உதவி அழைப்பு எண்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

