முதலீட்டு மோசடி: ஆடவர்மீது மேலும் 12 குற்றச்சாட்டுகள்
சிங்கப்பூரில் ஆகப் பெரிய முதலீட்டு மோசடி ஒன்றுடன் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர்மீது மேலும் 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. முறையற்ற வழியில் ஈட்டிய $2.4 மில்லியன் பணத்தை இரு சொகுசு கார்களை வாங்க அவர் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இங் யு ஸி எனும் அந்த 34 வயது சிங்கப்பூரர், நூற்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். என்வி சொத்து மேலாண்மை நிறுவனம் மற்றும் என்வி குளோபல் டிரேடிங் நிறுவனங்களின் முன்னாள் இயக்குநரான இங், முதலீட்டுத் திட்டம் ஒன்றின்மூலம் குறைந்தது $1.2 பில்லியன் மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டார். 2021 மார்ச் மாதம் முதன்முதலாக அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில், வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் வரும் மே 10ஆம் தேதி இடம்பெறும்.
மோசடிக் கும்பலை முடக்கிய சிங்கப்பூர்-ஹாங்காங் காவல்துறை
வேலை மோசடிகள் மூலமாக 400 பேருக்கு மேற்பட்டோரை ஏமாற்றி, கிட்டத்தட்ட $4.9 மில்லியன் ஏமாற்றிய கும்பலை சிங்கப்பூர், ஹாங்காங் காவல்துறையினர் முடக்கினர். 'ஆபரேஷன் பிளென்டிஸ்பிரிங்' என்ற கூட்டு நடவடிக்கையின் கீழ், சென்ற ஆண்டு ஜூன் 16-25ஆம் தேதிகளுக்குள், சிங்கப்பூர்- ஹாங்காங் காவல்துறையினர் பல இடங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். ஹாங்காங் காவல்துறை 22 பேரைச் சுற்றி வளைத்தது. சிங்கப்பூரில் குறைந்தது 27 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் 16 முதல் 76 வயதுக்கு இடைப்பட்டவர்கள். "இந்தக் கூட்டு நடவடிக்கையின்மூலம் எல்லை தாண்டிச் செயல்பட்ட அந்த வேலை மோசடிக் கும்பல் முடக்கப்பட்டுவிட்டதாக நம்புகிறோம்," என்று ஹாங்காங் காவல்துறைச் செய்தியாளர் தெரிவித்தார். சிங்கப்பூரில் அக்கும்பலுடன் தொடர்புடைய 300க்கும் மேற்பட்ட சம்பவங்களில் 19 மி. ஹாங்காங் டாலரும் (S$$3.3 மி.) ஹாங்காங்கில் 137 சம்பவங்களில் 9 மி. ஹாங்காங் டாலரும் ஏமாற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஹாங்காங்கில் பிடிபட்ட சந்தேகப் பேர்வழிகளுள் இருவரே மோசடிக் கும்பலின் தலைவர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அங்கு கைதான அனைவரும் பிணையில் விடுவிக்கப் பட்டனர். சிங்கப்பூரில் கைதான சந்தேகப் பேர்வழிகள் வங்கிப் பரிவர்த்தனைகள், வங்கிக் கணக்குகளில் இருந்து பணமெடுத்துக் கொடுத்தல் அல்லது தங்களது வங்கிக் கணக்குகளைக் குற்றக் கும்பல் பயன்படுத்த அனுமதித்தல் போன்ற வழிகளில் உதவியதாக சிங்கப்பூர் காவல்துறை முன்னதாகத் தெரிவித்திருந்தது.
முன்னாள் காவலருக்கு 5 நாள் சிறை
முழுநேர தேசிய சேவையாளர் ஒருவரை நோக்கி தமது கைத்துப்பாக்கியைக் காட்டிய முன்னாள் காவலருக்கு ஐந்து நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முகம்மது கைருல் கத்மாடி, 40, எனும் அந்த ஆடவர் வேடிக்கைக்காக இதைச் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சமூக ஈடுபாட்டுக் கடமைகளின் ஒரு பகுதியாக, பேரங்காடிக்குச் செல்ல சிறப்புக் காவலராக இருந்த அந்த தேசிய சேவையாளர் முன்வராததால் கைருல் அவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்பட்டது. கடந்த 2020 மார்ச் 30ஆம் தேதி மாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. ஆனாலும் அந்த தேசிய சேவையாளர் இது குறித்து உடனடியாக புகார் தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டது. எந்தப் பிரச்சினையும் இன்றி தமது தேசிய சேவையை முடிக்க அவர் விரும்பியதும் பின்விளைவுகள் ஏற்படலாம் என்று அஞ்சியதுமே அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. ஆனாலும், 2020 ஜூன் மாதம் இன்னோர் அதிகாரியிடம் அதுபற்றிச் சொல்ல, விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் காவல்துறைப் பணியைக் கைவிட்ட கைருல், இப்போது பகுதிநேர விநியோகிப்பாளராக இருந்து வருகிறார்.

