சிங்கப்பூரில் இந்த மாதம் புதிய கடப்பிதழுக்கான விண்ணப்பங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்திருப்பதாக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
காலாவதியான அல்லது விரைவில் காலாவதி ஆகவிருக்கும் கடப்பிதழ்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் என்று அது கூறியது.
அன்றாடம் கிட்டத்தட்ட 6,000 பேர் புதிய கடப்பிதழுக்கு விண்ணப்பிக்கிறார்கள்; ஒப்புநோக்க, கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு முன்பு ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,000 பேர் விண்ணப்பித்தனர்.
எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கான பயணக் கட்டமைப்பு அமலுக்கு வரவிருக்கும் வேளையில் சிங்கப்பூரர்கள் மீண்டும் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதை எதிர்நோக்கியிருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.
அதிகமான விண்ணப்பங்கள் வந்துசேர்வதால் அவற்றைச் சரிபார்த்து கடப்பிதழ்களை வழங்கக் கூடுதல் நேரம் பிடிக்கும்; அதுகுறித்து சிங்கப்பூரர்களின் புரிந்துணர்வை வேண்டுகிறோம் என்று ஆணையம் கூறியது.
அடுத்த சில மாதங்களில் பயணம் செய்யத் திட்டமிடும் சிங்கப்பூரர்கள் தங்கள் கடப்பிதழ்களைப் புதுப்பிக்கவேண்டி இருந்தால் முன்கூட்டியே விண்ணப்பிக்கும்படி அது கேட்டுக்கொண்டது.
ஆணையத்தின் இணையத் தளத்தின் மூலமும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். அடுத்த ஆறு மாதங்களுக்கு வெளிநாட்டுப் பயணங்களைத் திட்டமிடாத சிங்கப்பூரர்கள் இப்போது கடப்பிதழ்களைப் புதுப்பிக்கத் தேவையில்லை என்று ஆணையம் ஆலோசனை கூறியது.


