தியோங் பாருவில் செங் போ சாலையோரம் இருந்த வாகன நிறுத்துமிடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
மார்ச் 24ஆம் தேதி அங்கு பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு கார் வழிமறித்ததால், அவ்வழியாகச் சென்ற ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஓட்டுநர் ஒருவர், தமது காரை நிறுத்தினார். இதனால் அந்த காருக்குப் பின்னால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கார் செல்லும் அளவிற்கு அங்கு போதுமான இடம் இருக்கிறது என்று கூறிய வழிப்போக்கர் ஒருவருடன் அந்த ரோல்ஸ்-ராய்ஸ் ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலானது.
ஆனால், அந்தச் சம்பவத்தின் எதிரொலியாக செங் போ சாலையோரம் வாகன நிறுத்துமிடங்கள் நீக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
தியோங் பாரு பகுதியில் பாதசாரிகளுக்கும் சைக்கிளோட்டிகளுக்கும் வசதியை ஏற்படுத்தித் தர அங்கு நடைபாதைகள் விரிவுபடுத்தப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் முன்னதாகக் கூறியிருந்தது.


