மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வைத்திருப்போர் அவற்றை மின்னூட்டம் செய்யும் இடங்களைக் கண்டறிவதற்கும் அதற்கான கட்டணத்தை மின்னூட்டம் செய்யும் பிற இடங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் உதவும் சேவை அறிமுகம் கண்டுள்ளது.
'மை டிரான்ஸ்போர்ட்.எஸ்ஜி' செயலியில் புதிய அம்சமாக இந்தச் சேவை இடம்பெறும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நேற்று தெரிவித்தார்.
"மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவோர் தற்போது மின்னூட்ட வசதி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கவும் அவற்றுக்கான கட்டணத்தை ஒப்பிட்டுப் பார்க்கவும் வெவ்வேறு செயலிகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
"அவர்களுக்கு முழுமையான தகவல்களைத் தரும் நோக்கில் நிலப் போக்குவரத்து ஆணையம், மின்னூட்ட வசதிகளை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து ஒரே தளத்தில் முக்கியத் தகவல்களைக் காட்டும் சேவைக்கு ஏற்பாடு செய்துள்ளது.
"அருகில் இருக்கும் மின்னூட்ட வசதி, அங்கு வசூலிக்கப்படும் கட்டணம் போன்றவற்றை எளிதாகத் தெரிந்துகொள்ள இது வகைசெய்கிறது. புளூசார்ஜ், சிடிஜி எஞ்சி, சார்ஜ்+, ஷெல் ரீசார்ஜ், எஸ்பி மொபிலிட்டி ஆகியவை, சிங்கப்பூரின் 200 இடங்களில் அமைத்திருக்கும் 800க்கும் மேற்பட்ட மின்னூட்ட வசதிகள் பற்றிய தகவல்களை இது வழங்கும்," என்றார் திரு ஈஸ்வரன்.
படிப்படியாக இந்தச் செயலி மேம்படுத்தப்படும்; வருங்காலத்தில் ஒரு மின்னூட்ட வசதி காலியாக இருக்கிறதா என்று தெரிந்துகொண்டு பின்னர் அங்கு செல்வதற்கான நேரடித் தகவல்களும் இதில் சேர்க்கப்படும் என்றார் அவர்.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மாறிக்கொள்ளுதல் நமது நிலப் போக்குவரத்துக் கட்டமைப்பைப் பசுமையாக்கும் முயற்சியில் முக்கிய அம்சம் என்று குறிப்பிட்ட அமைச்சர், வாகனமோட்டிகள், வாகனத் தொழிற்சாலையினர், பயணிகள் உள்ளிட்ட நம் அனைவரின் வாழ்விலும் தொடர்புடைய அம்சம் இது என்று கூறினார்.
ஜூரோங் வெஸ்ட்டில் வீவக கார் நிறுத்துமிடத்தில் அமைந்த முதல் மின்னூட்ட வசதிக்கு அருகே அவர் செய்தியாளர்களிடம் பேசினார். நிலப் போக்குவரத்து ஆணையமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் 200 பொது கார் நிறுத்துமிடங்களில் 600 மின்னூட்ட வசதிகளைப் பொருத்துவதற்கு செய்த ஏற்பாட்டின்கீழ் அமைக்கப்பட்ட மின்னூட்ட வசதி அது.
நிலப் போக்குவரத்து ஆணையம் அடுத்த மாதம் கிட்டத்தட்ட இரண்டாயிரம் வீவக கார் நிறுத்துமிடங்களில் மின்னூட்ட வசதிகளைப் பொருத்த ஏலக்குத்தகையை அறிவிக்கவிருக்கிறது. 2025க்குள் கூடுதலாக 12,000 மின்னூட்ட வசதிகளை அமைப்பது இலக்கு. இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் குத்தகை வழங்கப்பட்டு அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

