வீட்டில் குழாய் வெடிகுண்டு தயாரித்த இரண்டு இளையர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒருவர் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர், மற்றவர் முழுநேர தேசியச் சேவையாளர்.
ஆயுதம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின்கீழ், 19 வயதான அவ்விருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் மீது மொத்தம் ஏழு குற்றச்சாட்டுகளும், முழுநேர தேசியச் சேவையாளருக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு உள்ளன.
2017ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த இருவரும் பல நாட்டு வெடிபொருள்களைத் தயாரித்து அவற்றை வெடிக்கவும் செய்ததாகக் கூறப்பட்டது. இவற்றை அவர்கள் தங்கள் வீடுகளிலும், வெளிப்புறத்திலும் செய்ததாகத் தெரிகிறது.
2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர்கள் இருவரும் ஒரு குழாய் வெடிகுண்டைத் தயாரித்து, அதை ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் வெடிக்கச் செய்ததாகக் கூறப்பட்டது.
குற்றங்கள் புரிந்தபோது அவர்களுக்கு 18 வயதுக்குக் குறைவாக இருந்ததால், அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட மாட்டா.
ஆயுதம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின்கீழ், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், $10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.