கைகலப்பில் ஈடுபட்ட முன்னாள் நடிகர்; நிபந்தனையுடன்கூடிய எச்சரிக்கை
ஓய்வுபெற்ற முன்னாள் நடிகரும் இயக்குநருமான இங் ஐக் லியாங், பொது இடத்தில் கைகலப்பில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் தொடர்பில் அவருக்கு நிபந்தனையுடன்கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி, பஃபலோ ரோட்டில் இரவு ஏழேகால் மணியளவில் ஆடவர் ஒருவரைத் தனது கைத்தொலைபேசியால் இங் பலமுறை தலையில் அடித்ததாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளை வித்ததாக இங் மீது குற்றம் சாட்டப்பட்டது. இம்மாதம் 25ஆம் தேதி, அந்தக் குற்றச்சாட்டைத் தற்காலிகமாக நீக்கியிருப்பதாக மாவட்ட நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர் உரிய ஆதாரங்களோ குற்றச்செயல் தொடர்பான தகவல்களோ கிடைத்தால் இந்தக் குற்றச்சாட்டு மீண்டும் சுமத்தப்படலாம்.
தடுப்பூசிக்கு பதில் உப்புக் கரைசல்: பொது மருத்துவர் மீது நடவடிக்கை
நோயாளிகளுக்கு 'சலைன்' எனப்படும் உப்புக் கரைசலை ஊசி மூலம் செலுத்தியதாகக் கூறப்படும் பொது மருத்துவர் ஜிப்சன் குவா, மருத்துவச் சேவை வழங்குவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கு எதிரான 'ஹீலிங் த டிவைட்' குழுவுடன் தொடர்புடைய அவர் கொவிட்-19 தடுப்பூசி தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பொய்யான தகவல் அளித்ததாக இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
33 வயதாகும் குவா, கொவிட்-19 தடுப்பூசிக்குப் பதில் உப்புக் கரைசலை நோயாளிகளுக்குச் செலுத்தியதுடன், சுகாதார அமைச்சின் தேசிய தடுப்பூசிப் பதிவேட்டில் அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாகப் பதிவிட்டார். நோயாளிகளிடம் கூடுதலான தொகையையும் வசூலித்தார் என்று கூறப்பட்டது.
இத்தகைய குற்றச்சாட்டுகளின் தொடர்பில், இம்மாதம் 23ஆம் தேதி முதல் 18 மாதங்களுக்கு அவர் மருத்துவ ராகப் பணியாற்றத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் கேமராக்களை சேதப்படுத்திய ஆடவர் கைது
நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள புளோக் 9ல் பொருத்தப் பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்கள் மீது சாயம் தெளித்ததுடன் சில கேமராக்களின் மின் இணைப்புகளைத் துண்டித்த ஆடவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு 10.55 மணிவாக்கில் தெரியவந்ததாக காவல்துறை கூறியது. ஆடவர் எட்டு கேமராக்கள் மீது கறுப்பு சாயத்தைத் தெளித்ததும் அவற்றில் இரண்டு கேமராக்களின் மின் இணைப்பைத் துண்டித்ததும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப் பட்டது.
விசாரணை மற்றும் காவல்துறை கேமராக்களின் உதவியுடன் அதிகாரிகள் ஆடவரை அடையாளம்கண்டு கைதுசெய்தனர். இன்று நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்படும்.

