போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியரின் சீராய்வு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
மலேசியரான திரு நாகேந்திரன் தர்மலிங்கம் தாம் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய மனநிலையில் இல்லை என்றும் இது குறித்து உளவியல் மருத்துவர் குழு தம்மைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். அதுவரை தமது மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு தடை விதிக்க வேண்டுமென்றும் மனுச் செய்திருந்தார்.
இதை தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று நிரகரித்து தீர்ப்பளித்தது.
திரு நாகேந்திரனின் மனு சட்ட அடிப்படையிலும், வழக்கு விவரங்களின் அடிப்படையிலும் விசாரணைக்கு தகுதியில்லாதது என்று நீதிமன்றம் கூறியது.
இவர் சார்பில் வாதாடிய திருவாட்டி வைலட் நெட்டோ என்ற வழக்கறிஞர், 33 வயது திரு நாகேந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் அதனால் அவர்மீதான மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்றும் வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, அவருடைய மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுவதற்கு எவ்வித சாட்சியமும் இல்லை என்றார்.
திரு நாகேந்திரனின் மனநிலை குறித்து அவருடைய முன்னாள் வழக்கறிஞர் திரு ரவியின் பிரமாண வாக்குமூலம் மட்டுமே உள்ளதாகத் தெரிவித்தார். திரு ரவியின் பிரமாண வாக்குமூலத்தில் திரு நாகேந்திரனின் மனநிலை 18 வயதுக்கும் கீழே உள்ள ஒருவரின் மனநிலையை ஒத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.
திரு நாகேந்திரனை கடந்த நவம்பர் மாதம் 2ஆம் தேதி அரைமணி நேரம் மட்டுமே சந்தித்த அடிப்படையில் திரு ரவி அவருக்கு மனநிலை சரியில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தனர்.
மேலும், திரு நாகேந்திரனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5, நவம்பர் 3ஆம் தேதிகளில் பரிசோதித்த மருத்துவர்களின் அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திரு ரவி ஆட்சேபணை தெரிவித்ததையும் நீதிபதிகள் சுட்டினர்.
திரு நாகேந்திரனின் மனநிலை பற்றிக் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அது தொடர்பான மருத்துவ ஆவணங்களை பரிசீலிக்க ஆட்சேபம் தெரிவிப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் நீதிபதிகள் வினவினர்.
2009ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குள் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தியதாக நாகேந்திரன் கைதுசெய்யப்பட்டார்.

