சிங்கப்பூரில் நீண்டகால கண்ணோட்டத்தைக் கருத்தில்கொண்டு சாங்கி விமான நிலையம் முனையம் 5ஐ பெரிய அளவில் உருவாக்குவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன.
கொவிட்-19 காரணமாக பின்னடைவு இருந்தாலும் பயணிகள் போக்குவரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என்பதே சிங்கப்பூரின் கணிப்பாக இருக்கிறது என போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நேற்று தெரிவித்தார்.
ஆசிய பசிபிக் வட்டாரத்திலும் இந்தப் போக்கு நிலவும் என்று தெரியவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதிகாரிகள் நீண்டகால கண்ணோட்டத்தில் செயல்படுகிறார்கள். உரிய நேரத்தில் அவர்கள் அறிவிப்பு விடுப்பார்கள் என்று அமைச்சர் கூறினார்.
முனையம் 5 கட்டுமானப் பணி கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இரண்டாண்டுகள் ஆகும் நிலையில் அமைச்சரின் கருத்து இடம்பெற்று உள்ளது.
கொவிட்-19 தொற்றுக் காரணமாக விமானப் போக்குவரத்து தொழில்துறை எப்படி ஆகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்தச் சூழலில் முனையம் 5ன் கட்டுமானம் குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் நிறுத்தி வைக்கப்படும் என்று கடந்த 2020ல் அப்போதைய போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் அறிவித்து இருந்தார்.
விமானப் போக்குவரத்து தொழில்துறை எப்படி பரிணமிக்கும் என்பதை அரசாங்கம் ஆராயும் என்றும் புதிய பாதுகாப்பு நிபந்தனைகளை எல்லாம் கருத்தில் கொண்டு முனையம் 5ன் வடிவமைப்பு மாற்றப்படும் என்றும் திரு கோ தெரிவித்து இருந்தார்.
முனையம் 5 வரும் 2030ல் கட்டி முடிக்கப்படத் திட்டமிடப்பட்டது. அது ஏறத்தாழ 667 காற்பந்துத்திடல் அளவுக்குப் பெரியதாக இருக்கும்.
தொடக்கத்தில் அது ஆண்டு ஒன்றுக்கு 50 மில்லியன் பயணிகள் வரை கையாளும். இது ஒருபுறம் இருக்க, 2வது முனையமும் மேம்படுத்தப்படுகிறது.
இதுவும் சேர்ந்து சாங்கி விமான நிலையம் ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ 140 மில்லியன் பயணிகளைக் கையாளும் ஆற்றலைப் பெற்றிருக்கும். முனையம் 2ன் மேம்பாட்டுப் பணிகள் சென்ற இரண்டாண்டுகளில் குறிப்பிட்ட அளவுக்கு நடந்து இருக்கின்றன.
பயணிகள் குறைந்துவிட்டதால் 2020 மே மாதம் அந்த முனையம் மூடப்பட்டது. அது இந்த ஆண்டில் படிப்படியாகத் திறக்கப்பட்டுவிடும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இருந்தாலும் முனையங்கள் மீண்டும் திறக்கப்படுவது பல்வேறு இதர சூழ்நிலைகளையும் பொருத்திருக்கும் என்றார் அவர்.

