சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வரும் வலுவான பங்காளித்துவத்தைப் பிரதமர் லீ சியன் லூங்கும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹேரிஸும் மறுவுறுதிப்படுத்திக்கொண்டுள்ளனர். மேலும், கூடுதல் அம்சங்களில் இரு நாடுகளும் ஒத்துழைப்பது குறித்தும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரதமர் லீ அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். நாளை மறுதினம் வரை நீடிக்கும் இப்பயணத்தின் ஓர் அங்கமாக அவர் திருவாட்டி கமலாவை நேற்று சந்தித்தார்.
சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருந்து வரும் பொருளியல், தற்காப்பு ரீதியான தொடர்புகளைப் பற்றி திருவாட்டி கமலா பெருமையாகப் பேசினார்.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவாட்டி கமலா சிங்கப்பூர் உட்பட இந்த வட்டார நாடுகளுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது சிங்கப்பூருக்கு வருகை தந்தபோது அவர் இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் ஒத்துழைப்பது குறித்து அறிவித்திருந்தார். அவை குறித்தும் இருவரும் கலந்துபேசினர்.
அமெரிக்காவின் தலைமையில் விண்வெளி ஆய்வுக்கான 'அர்ட்டெமிஸ் அக்கோர்ட்ஸ்' எனும் அனைத்துலக அளவிலான ஒப்பந்தத்தில் கடந்த திங்கட்கிழமையன்று சிங்கப்பூர் கையெழுத்திட்டது. வெள்ளை மாளிகையின் தேசிய விண்வெளி மன்றத்திற்குத் தலைவரான திருவாட்டி கமலா அதைத் தெரிவித்தார். சிங்கப்பூர், இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறும் முதல் தென்கிழக்காசிய நாடு.
ஆண்டுதோறும் நடைபெறவுள்ள அமெரிக்க-சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு கலந்துரையாடலையும் இரு நாடுகளும் தொடங்கிவைத்தன. உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் தொடர்பில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தம் குறித்தும் அறிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்கா ஆக்கபூர்வமான வகையில் முக்கியப் பங்காற்றி வருவதாகத் திரு லீ குறிப்பிட்டார்.
மேலும், தனது பேச்சாலும் செயல்களாலும் சிங்கப்பூர் இந்த வட்டாரத்தில் அமெரிக்கா ஆற்றிய பங்கிற்கு ஆதரவளித்திருப்பதை அவர் சுட்டினார்.
"பல அரசாங்கங்களை நான் கவனித்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது ஆசியாவில் நீண்டகாலம் நிலைக்கும் சாதனையைப் புரிவதில் இந்த அரசாங்கத்திற்கு முழு ஈடுபாடு இருக்கிறது என்பதை என்னால் ஓரளவு உறுதியாகச் சொல்லமுடியும்," என்று ஆசியாவில் அமெரிக்கா கொண்டுள்ள ஈடுபாடு குறித்து திரு லீ பேசினார். தம்மிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
"அவர்கள் பரிந்துரைக்கும் திட்டங்கள் எதிர்பார்த்த பலன்களை அளிப்பதோடு அவை சரியாக கடைப்பிடிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு வளர்ச்சி காண்பதை சிங்கப்பூர் தம்மால் முடிந்தவரை உறுதிசெய்ய உதவும்," என்று திரு லீ கூறினார்.
'யுஎஸ்-சிங்கப்பூர் பார்ட்னர்ஷிப் ஃபார் குரோத் அண்ட் இனோவேஷன்' எனும் வளர்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றுக்கான இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பங்காளித்துவத்தின்கீழ் புதிய அம்சங்களில் ஒத்துழைக்கப்போவதாக சிங்கப்பூரும் அமெரிக்காவும் அறிவித்தன. மின்னிலக்கப் பொருளியல், அறிவார்ந்த நகரங்கள் உள்ளிட்டவற்றில் அனைவரையும் உள்ளடக்கும் விதத்தில் வளர்ச்சியடைய வகைசெய்வது இந்த பங்காளித்துவத்தின் நோக்கம்.
தகவல்களை பரிமாறிக்கொள்ளக்கூடிய வகையில் செயற்கை நுண்ணறிவுக்கான விதிமுறைகளை வரைய சிங்கப்பூரும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும். சிறந்த இணையப் பாதுகாப்பு வழிகாட்டிகளை உருவாக்கவும் இரு நாடுகளும் ஒத்துழைக்கும்.

