பல பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் அமெரிக்கா, ஆசிய பசிபிக் நாடுகளுடனான உறவை வளர்த்துக்கொள்ளும் என்று சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டுள்ளதாகப் பிரதமர் லீ கூறியுள்ளார். வாஷிங்டனில் நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தபோது அவர் அவ்வாறு சொன்னார்.
உக்ரேனில் நிலவிவரும் நெருக்கடியைக் கையாள்வதில் தமது அரசாங்கம் கவனம் செலுத்தி வந்தாலும் இந்தோ-பசிபிக் வட்டாரத்துக்கான திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் அது ஈடுபாடு காண்பித்து வருவதாக திரு பைடன் குறிப்பிட்டார். வாஷிங்டனில் நடைபெறவுள்ள சிறப்பு மாநாடு ஒன்றில் விரைவில் ஆசியான் தலைவர்களைச் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார். அதைப் பிரதமர் லீ வரவேற்றார்.
"ஆசியான்-அமெரிக்க சிறப்பு மாநாட்டை விரைவில் இங்கு அவர் (வாஷிங்டன்) நடத்த விரும்புவதை நாங்கள் வரவேற்கிறோம். தென்கிழக்காசியாவுக்கும் ஆசியானுக்கும் முக்கியத்துவம் அளிப்பதில் அமெரிக்காவின் ஈடுபாட்டை இது வலுவான முறையில் எடுத்துக்காட்டுகிறது," என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.
தங்களின் சந்திப்பின் தொடக்கத்தில் இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசினர். ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து இருவரும் கலந்துபேசினர்.
உலக விவகாரங்களைப் பொறுத்தவரை முக்கியமான தருணத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதை அவர்கள் குறிப்பிட்டனர்.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்திருப்பது, ஐரோப்பா, இந்தோ-பசிபிக் ஆகிய இரு வட்டாரங்களும் உடனடியாகக் கையாளவேண்டிய மிரட்டலாக அமைந்துள்ளது என்று திரு பைடன் சொன்னார்.
"ஆதிக்கம் செலுத்தி எல்லைகளை மாற்றமுடியாது, பெரிய, சிறிய நாடுகள் அனைத்தும் சமமானவை, தன்னாட்சி உரிமை கொண்டவை என்ற அனைத்துலக அளவில் இருக்கும் ஒழுங்கின் முக்கிய அம்சங்களை இது கேள்விக்குறியாக மாற்றுகிறது," என்று திரு பைடன் ரஷ்யத் தாக்குதலைப் பற்றிக் கூறினார். உக்ரேன் மக்களை ஆதரிப்பதன் மூலம் கொள்கைகளை நிலைநாட்டுவதில் வழிகாட்டியாக இருந்த சிங்கப்பூருக்கு அவர் பிரதமர் லீயிடம் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
"தன்னாட்சி உரிமை, அரசியல் ரீதியாக சுயமாக இயங்குவது, பெரிய, சிறிய நாடுகளின் எல்லை சார்ந்த உரிமைகள் ஆகியவற்றை மதிக்கவேண்டும். எந்த நிலையிலும் காரணமின்றி சுய ஆதிபத்ய உரிமையைக் கொண்ட ஒரு நாட்டின் மீது வேறு நாட்டு ராணுவம் படையெடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது," என்று திரு லீ கூறினார்.

