செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
1bbb4413-3beb-41f8-b4c8-d548148a2379
-

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின்

இணையப் பாதுகாப்பு ஆய்வுக் கூடம்

தொழில்நுட்பக் கல்விக் கழகம் புதிய இணையப் பாதுகாப்பு ஆய்வுக் கூடத்தைத் திறந்துள்ளது. நடைமுறையில் உள்ள சூழல்களை மையமாகக்கொண்டு மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க இந்தக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய இணையப் பாதுகாப்பு ஆய்வுக் கூடம் தொழில்நுட்பக் கல்விக் 'ஐடிஇ காலேஜ் ஈஸ்ட்' கிளையில் அமைந்துள்ளது. முதன்முறையாக இணையப் பாதுகாப்பிற்கான ஆய்வுக் கூடம் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இத்தகைய கூடங்கள் ஏற்கெனவே சிங்கப்பூரில் உள்ள பலதுறைத் தொழிற்கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இருக்கின்றன.

'லூமென் டெக்னாலஜிஸ்', 'ரியாகியூடிஎ', 'செக்யூர்ஏஜ்' உள்ளிட்ட இணையப் பாதுகாப்பு நிறுவனங்கள், சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

புக்கிட் மேரா வீட்டில் தீ

புக்கிட் மேரா வட்டாரத்தில் உள்ள ஒரு வீவக வீட்டில் தீ மூண்டது. அதில் காயமடைந்த ஐவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு தீக் காயங்கள் ஏற்பட்டன. இதர நால்வருக்குப் புகையை நுகர்ந்ததால் சிகிச்சை தேவைப்பட்டது.

புக்கிட் மேரா வியூவில் உள்ள வீவக புளோக் 121ன் இரண்டாம் மாடியில் உள்ள வீட்டில் தீ மூண்டதாக நேற்று காலை சுமார் 11.45 மணிக்குத் தகவல் வந்ததென சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் கருவிகளால் தீயணைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்த இருவர் ஏற்கெனவே வெளியேறிவிட்டனர். புளோக்கில் வசிக்கும் மேலும் 35 பேர் பின்னர் வெளியேற்றப்பட்டனர்.

படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை / ஃபேஸ்புக்

$500,000 மதிப்புள்ள மோசடியுடன் தொடர்புடைய ஆடவருக்குச் சிறை

மோசடிச் செயல்களின் மூலம் வங்கிக் கணக்குகளுக்கு 500,000 வெள்ளிக்கும் அதிகமான தொகை சேர்க்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்பிருந்த ஆடவருக்கு 27 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியான 56 வயது முகம்மது ஜமாய்ல் பனாக்கானி ஷாஃபி கானின் வங்கிக் கணக்கும் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் ஒன்று. அவரின் வங்கிக் கணக்கில் 67,633 வெள்ளி சேர்க்கப்பட்டது.

மேலும், தான் இயக்குநராகவும் பங்குதாரராகவும் இருந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கின் வாயிலாக அவர் 460,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பெற்றிருக்கிறார்.

சிங்கப்பூரரான கான், தன் மீது சுமத்தப்பட்ட எட்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். குற்றச்செயல்களின் மூலம் பலனடைந்ததன் தொடர்பில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.

கானுக்கான பிணைத் தொகை 50,000 வெள்ளி. சிறைத் தண்டனையை நிறைவேற்ற வரும் மே மாதம் நான்காம் தேதியன்று நீதிமன்றத்தில் சரணடையுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.

முன்னாள் வனவிலங்குக் காப்பக

நிர்வாகிக்குச் சிறை, அபராதம்

கையூட்டு பெற்றதால் 'டபிள்யுஆர்எஸ்' எனும் சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தின் முன்னாள் நிர்வாகி ஒருவருக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அபராதமாக 42,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைச் செலுத்துமாறும் குற்றவாளியான 44 வயது சின் ஃபோங் யீக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மண்டாய் வனவிலங்குக் குழுமம் என்று பெயர் மாற்றம் கண்டுள்ள சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தில் நிர்வாகியாகப் பணிபுரிந்த சின், கையூட்டு பெற்றதன் தொடர்பில் தன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

சின், குறைந்தது 51,750 வெள்ளியைக் கையூட்டாகப் பெற்றார்.