தொழில்நுட்பத் துறை சார்ந்த திறனாளர்களைக் கண்டுபிடிப்பது தற்போது குதிரைக்கொம்பாக உள்ளது என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மென்பொருள் உருவாக்குபவர்கள், தரவு விஞ்ஞானிகள், மேம்பாட்டுச் செயல்பாடு பொறியாளர்கள் போன்ற பொறுப்புகளில் முன்னதாக ஓரிரு மாதங்களில் ஊழியர்களை அமர்த்த முடிந்தது.
ஆனால், தற்போதைய சூழலில் மூன்று மாதங்களுக்கு மேல் ஆவதாக புருடென்ஷல் சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த திருவாட்டி நீத்தா நாயர் கூறினார்.
அத்துடன் அதிகத் திறனுடையவர்கள், தொழில்நுட்பம் சாராத நிறுவனங்களைக் காட்டிலும் தொழில்நுட்ப நிறுவனங்களையே நாடுவதாகவும் கூறப்பட்டது.
தங்களின் திறன்களுக்கு ஏற்ற பணிகள் அத்தகைய நிறுவனங்களில் அமையும் என்றும் இதர தொழில்நுட்பப் பிரிவுகளில் விரிவடையும் வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும் என்றும் இவர்கள் நினைக்கின்றனர்.
தகவல்தொடர்பு, நிதிச் சேவைகள், நிபுணத்துவ சேவைகள் போன்ற வளர்ச்சித் தொழில் பிரிவுகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையே வேலைவாய்ப்புகள் அதிகரித்ததாக மனிதவள அமைச்சு இம்மாதத் தொடக்கத்தில் புள்ளிவிவரங்கள் வெளியிட்டது. 2021ன் நான்காம் காலாண்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 18 விழுக்காட்டை இந்த வளர்ச்சித் துறைகள் பெற்றிருந்தன.
இருப்பினும், இன்னும் நிரப்பப்படாத வேலைகளில் 28 விழுக்காட்டையும் இதே வளர்ச்சித் துறைகள்தான் பெற்றன. அத்துடன் அவற்றில் பெரும்பாலானவை நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் பொறுப்புகளாகும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பங்கேற்ற 2,000க்கும் மேற்பட்ட முதலாளிகள் மற்றும் 7,000 ஊழியர்கள் மின்னிலக்கத் திறன் தொடர்பில் கருத்து கூறியிருந்தனர். நிறுவனங்களுக்குத் தேவைப்படும் மின்னிலக்கத் திறன்களுக்கும் ஊழியர்களிடம் அத்திறன்கள் இருப்பதற்கும் உள்ள இடைவெளி அதிகரிப்பதாக தெரியவந்தது.

