வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் சுமார் 950,000 சிங்கப்பூர் குடும்பங்கள் ஜிஎஸ்டி யு-சேவ்பற்றுச்சீட்டை அடுத்த மாதம் பெறுவார்கள்.
பொதுப் பயனீட்டுக் கட்டணச் செலவு, ஜிஎஸ்டி ஆகியவற்றை சமாளிக்க இந்தப் பற்றுச்சீட்டைப் பயன்படுத்தலாம்.
இதனை வழங்க அரசாங்கம் இவ்வாண்டு கிட்டத்தட்ட 720 மில்லியன் வெள்ளி செலவிடும் என்று நிதி அமைச்சு தெரிவித்தது.
இந்தாண்டு ஏப்ரல், ஜுலை, அக்டோபர், 2023ஆம் ஆண்டு ஜனவரி என்று நான்கு தொகுதிகளாக பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
வீட்டு வகையைப் பொறுத்து, தகுதிபெறும் குடும்பங்கள் 440 வெள்ளியிலிருந்து 760 வெள்ளி வரையிலான தள்ளுபடியைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
ஓரறை, ஈரறை வீடுகளில் வசிப்போருக்கு அடுத்த மாதம் 95 வெள்ளியும் மூவறை வீடுகளில் வசிப்போருக்கு 85 வெள்ளியும் கிடைக்கும்.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்தப் பற்றுச்சீட்டுகள் அறிவிக்கப்பட்டன. மேம்படுத்தப்பட்ட பொருள், சேவை வரிப் பற்றுச்சீட்டு, குடும்பங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத்திட்டம் முதலியவற்றின் ஓர் அங்கமாக பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.


