புகைப்படங்கள் அல்லது காணொளிகள் எடுப்பதற்காக ஓட்டுநர்கள் தங்களது கார்களை சுரங்கச்சாலைகளில் நிறுத்திவைத்ததன் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவ்விரு சம்பவங்களைக் காட்டும் காணொளிப் பதிவுகள் SG Road Vigilante எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஐந்து கார்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த சுரங்கச் சாலையை நோக்கி ஐந்து ஆடவர்கள் நடப்பதை முதல் பதிவில் இடம்பெற்ற காணொளி காட்டுகிறது.
மற்றொரு பதிவில் இடம்பெற்ற காணொளி, சுரங்கப்பாதையில் நான்கு கார்கள் அணிவகுத்து நிற்பதைக் காட்டுகிறது. அந்த கார்களின் ஓட்டுநர்கள் என நம்பப்படும் ஆடவர்கள் சிலர், கார்களிலும் அவற்றுக்குப் பக்கத்திலும் புகைப்படத்துக்குக் காட்சியளித்தனர்.
"சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு இத்தகையோர் ஆபத்து விளைவிக்கின்றனர். இவர்கள் விதிகளை அத்துமீறுகின்றனர்," என்று சேம் லிம் எனும் ஃபேஸ்புக் பயனர் பதிவிட்டார்.
"புகைப்படங்கள் எடுப்பதற்கு எத்தனையோ அழகான இடங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஏன் சாலையின் நடுவே வழிமறித்துக்கொண்டு இப்படி பொறுப்பின்றி செய்கின்றனர்?" என்றார் மற்றோர் இணையவாசியான ஃபிரான்சிஸ் லிம்.
இது தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், சாலையைப் பயன்படுத்தும் மற்ற வாகனமோட்டிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று வாகனமோட்டிகளிடம் வலியுறுத்தியது.


