அரசாங்கம் வழங்கியுள்ள ஏறத்தாழ 300,000 பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் இன்னும் பெற்றுக்கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு பற்றுச்சீட்டின் மதிப்பு $30. அவற்றைக் கொண்டு பொதுப் போக்கு
வரத்து பயண அட்டைகளை நிரப்பலாம். அல்லது மாதாந்திர சலுகை அட்டைகளை வாங்கலாம்.
பொதுப் போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பைச் சமாளிக்க குடும்பங்களுக்கு உதவும் வகையில் 600,000 பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளை அரசாங்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கியது. அதிகபட்சம் $1,600 தனிநபர் வருமானம் கொண்டுள்ள குடும்பங்கள் இந்தப் பற்றுச்சீட்டுக்குத் தகுதி பெறுகின்றன.
நேற்றைய நிலவரப்படி இன்னும் 300,000 பற்றுச்சீட்டுகள் இன்னும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
"குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவ ஏப்ரல் 2022லிருந்து 30,000க்கும் அதிகமான சமூகப் பராமரிப்பு அமைபப்புகளுக்கு பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் படிப்படியாக அனுப்பி வைக்கப்படும்," என்று அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
இதற்கு முன் இல்லாத அளவில் இதுவே பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆக அதிகமான பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் என்று போக்குவரத்து அமைச்சும் மக்கள் கழகமும் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தன.
பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதி பெற தனிநபர் வருமானம் $1,200லிருந்து $1,600ஆக உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 2.2 விழுக்காடு உயர்த்தப்பட்டது. இதன் விளைவாக பெரியவர்களுக்கான கட்டணம் அட்டை மூலம் செலுத்தப்படும்போது பயண தூரத்தைப் பொறுத்து மூன்றிலிருந்து நான்கு காசு அதிகரித்துள்ளது.
மூத்தோர், மாணவர்கள், உடற்குறையுள்ளோர், குறைந்த வருமான ஊழியர்கள் ஆகியோருக்கான சலுகைக் கட்டணம் ஒரு காசு அதிகரித்தது.
ரொக்கமாக செலுத்தப்படும் கட்டணம், ஒருவழிப் பயணம், மாதாந்திர சலுகை, பயண அட்டைகள் ஆகியவற்றுக்கான விலையில் மாற்றம் இல்லை.
பற்றுச்சீட்டுக்குத் தகுதி பெறுபவர்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ள இணையம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். அல்லது சமூக நிலையங்களின் உதவியை நாடலாம்.
"வருமான அடிப்படையில் தகுதி பெறாவிட்டாலும் அல்லது ஏற்கெனவே பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டு பெற்றவராக இருந்தாலும் உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவுக்கரம் நீட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
"உங்கள் வீட்டுக்கு மிக அருகில் உள்ள சமூகநிலையத்துக்குச் செல்லுங்கள். ஒவ்வொருவரின் நிலை தனித் தனியாக ஆராயப்பட்டு அவர்களது விண்ணப்பம் மதிப்பீடு செய்யப்படும்," என்று அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

