சிங்கப்பூருக்கு வரும் குறுகியகால சுற்றுப்பயணிகளுக்கு பயணக் காப்புறுதி இனி கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று முதல் நடப்புக்கு வருகிறது.
சுகாதார அமைச்சின் பொதுப் பயணப் பிரிவு நாடுகள் பட்டியலின்கீழ் விமானம், நிலம், கடல் ஆகியவற்றின் வழி சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகளுக்கு இந்தப் புதிய விதிமுறை பொருந்தும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. சிங்கப்பூருக்குள் நுழைய முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள பெரியவர்களுக்கான அதே விதிமுறைகள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 12 வயது அல்லது அதற்கும் குறைவான சிறுவர்களுக்குப் பொருந்தும். இதற்கு முன்பு சிங்கப்பூருக்கு வரும் குறுகியகால சுற்றுப்பயணிகளுக்கு பயணக் காப்புறுதி கட்டாயமாக்கப்பட்டது.
ஒருவேளை அவர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கான மருத்துவச் செலவைக் காப்புறுதித் திட்டம் பார்த்துக்கொள்ளும். அதற்காகவே பயணக் காப்புறுதி கட்டாயமாக்கப்பட்டது.
குறைந்தபட்சம் $30,000 பெறுமானமுள்ள மருத்துவக் கட்டணத்துக்கான பயணக் காப்புறுதியை குறுகியகால சுற்றுப்பயணிகள் வாங்க வேண்டும் என்ற விதிமுறை நடப்பில் இருந்தது. சிங்கப்பூரில் உள்ள காப்புறுதி நிறுவனங்கள் அல்லது வெளிநாடுகளில் உள்ள காப்புறுதி நிறுனங்களிடமிருந்து பயணக் காப்புறுதியை வாங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள சுற்றுப்பயணிகளுக்கு இன்று முதல் பல கொவிட்-19
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எளிதாகப்பட்டுள்ள தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணக் கட்டமைப்பின்கீழ் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தும் விதிமுறைகள் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.

