ஆறு மாதத்திற்குள் வேலையைவிட்டு நீக்கினால் முகவையிடம் பணம் கோரலாம்
வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணை வேலையில் சேர்த்து ஆறு மாதங்களுக்குள் அவரை நீக்கிவிட்டால் முதலாளிகள், வேலை நியமன முகவை அமைப்புக்குச் செலுத்திய கட்டணத்தில் குறைந்தபட்சம் பாதியைத் திரும்பப் பெறலாம்.
இதற்கான உரிமை வரும் ஜூன் முதல் முதலாளிகளுக்கு உண்டு என்று மனிதவள அமைச்சு அறிவித்து இருக்கிறது. முதலாளிகள் வேலையில் சேர்க்கும் மூன்று பணிப்பெண்கள் வரை இந்தத் தொகையைத் திருப்பி பெறும் உரிமை அவர்களுக்கு இருக்கும்.
தொகையைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்கும் முதலாளிகள், அதோடு, வேறு இல்லப் பணிப்பெண் தேவை என்று வேண்டுகோள் விடுக்கவும் முடியும்.
வேலை நியமன முகவைகள் இதற்கான வாய்ப்பை அளித்தால் முதலாளிகள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
முதலாளிகள் வேலை நியமனச் சட்டங்களை மீறி இருந்தால் அல்லது இல்லப் பணிப்பெண்களுக்கு எதிராக குற்றங்களைச் செய்திருந்தால், வேலை நியமன முகவைகள் நிர்வாகப் பணிகளை மட்டும் செய்து இருந்தால் அந்தத் தொகையை முகவைகள் திருப்பித் தரவேண்டாம்.
பணிப்பெண் ஒருவர் பராமரிப்பாளராக நியமிக்கப்பட்டால், அவரின் பராமரிப்பில் இருந்தவர் மரணமடைந்துவிடும் பட்சத்தில் இனிமேல் அந்தப் பணிப்பெண்ணின் சேவை தேவையில்லை என்று அவர் வேலையில் இருந்து நீக்கப்படுவாரேயானால், அல்லது அந்தப் பணிப்பெண்ணின் பராமரிப்பில் இருந்தவர் வேறு ஒருவரின் பராமரிப்புக்கு மாறிக்கொள்ளும் பட்சத்தில் முதலாளிகள் தொகையைத் திரும்பப் பெற முடியாது.
தொகையைத் திருப்பித் தரும்படி கேட்கும் முதலாளிகள், இல்லப் பணிப்பெண்ணின் வேலை நியமனத்தை முடிப்பதற்கு முன்னதாகவே அது பற்றி வேலை நியமன முகவையிடம் தெரிவித்துவிட வேண்டும்.
இதனிடையே, இதுபற்றிக் கருத்து தெரிவித்த மனிதவள அமைச்சின் வெளிநாட்டு ஊழியர் நிர்வாகப் பிரிவின் வட்டார இயக்குநர் கெவின் டியோ, முதலாளிகள், பணிப்பெண்கள் இருவருக்கும் பொருத்தமான சூழலை மேம்படுத்தும் பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகிறது என்று கூறினார்.
இதுபற்றிக் கருத்துக் கூறிய சிங்கப்பூர் வேலை நியமன முகவர்கள் சங்கத்தின் தலைவர் திருவாட்டி கே. ஜெயபிரேமா, சேவைக் கட்டணத்தைத் திரும்பக் கொடுக்கும் கொள்கை முதலாளிகளும் வேலை நியமன முகவைகளும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது என்றார்.
முதலாளிக்குப் பொருத்தமான பணிப்பெண்கள் கிடைக்கும் வகையில் வேலை தொடர்பான தேவைகளை முன்னதாகவே இரண்டு தரப்பினரும் தெள்ளத்தெளிவாக அறிவிப்பதற்கு இந்த ஏற்பாடு ஊக்கமூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கொள்கை சரளமாக அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தச் சங்கம் வேலை நியமன முகவர்களுக்கும் முதலாளிகளுக்கும் வழிகாட்டி உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

