உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பேருந்து வழிகளில் இருக்கும் தானியக்கத் தடங்களின் எண்ணிக்கை கூடி இருக்கிறது. மலேசியாவுடன் கூடிய தனது தரை எல்லையைச் சிங்கப்பூர் இன்று முதல் திறக்கிறது.
இதற்கு முன்னதாக தானியக்கப் பேருந்துத் தடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளின் ஆற்றலைப் பெருக்கும் வகையில், பேருந்து, கார் முகப்புகளை இந்த ஆணையம் தனி ஓட்டுநர்களுக்கான தானியக்க குடிநுழைவு அனுமதி வழங்கும் வழிகளாக ஆக்கி இருக்கிறது.
நிலப் போக்குவரத்து ஆணையமும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் பல்வேறு முறைகளையும் பராமரித்து, மேம்படுத்தி பரிசோதித்து வருகின்றன.
எதிர்பாரா சூழ்நிலைகளை சமாளிக்க ஏற்பாடுகளும் தயாராக இருக்கின்றன.
இருந்தாலும் பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து தாமதங்கள் எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் தெரிவித்தது.
குறிப்பாக உச்ச நேரங்களில் அவசியமில்லாத பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளும்படி ஆணை யம் கேட்டுக்கொண்டது.
பயணிகளின் எண்ணிக்கை கூடும். அதற்கேற்ப நடைமுறைகள் நடப்பில் இருக்கும். இவற்றைச் சமாளிக்கும் வகையில் சோதனைச்சாவடி அமைப்புகள் அனைத்தும் சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் அனைவரும் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதை ஒட்டி, அதற்கேற்ப மனித வளத்திற்கும் திட்டங்கள் போடப்பட்டு இருக்கின்றன. போக்குவரத்து சூழ்நிலைகளைக் கண்காணித்து அதற்கேற்ப வளங்களை ஆணையம் சரிசெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

