கட்டுப்பாடுகள் அதிகமின்றி இனி விமானச் சேவைகளைப் பயன்படுத்தும் அதிகமான பயணிகள் சாங்கி விமான நிலையத்திற்கு வந்து போகலாம். இதைத் தொடர்ந்து விமான நிலையத்தின் முனையங்களிலிருந்து செல்ல டாக்சிகளுக்குக் காத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும்
இதைக் கருத்தில்கொண்டு விமான நிலையத்திலிருந்து பயணிகளை அழைத்துச் செல்ல டாக்சி ஓட்டுநர்களை ஊக்குவிக்க சாங்கி விமான நிலையக் குழுமம் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன்கீழ் ஒவ்வொரு நாளும் ஒன்றாம், மூன்றாம் முனையங்கள், ஜுவல் சாங்கி ஆகியவற்றிலிருந்து குறைந்தது மூன்று முறை பயணங்களை மேற்கொள்ளும் ஓட்டுநர்களுக்கு 10 வெள்ளி வெகுமானம் வழங்கப்படும்.
இதன்படி தினமும் காலை ஆறிலிருந்து 10 மணிவரை, நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை, பிற்பகல் நான்கு மணியிலிருந்து மாலை ஏழு மணிவரை ஆகிய வேளைகளில் டாக்சி ஓட்டுநர்கள் இந்தப் பகுதிகளிலிருந்து பயணம் மேற்கொள்ளவேண்டும்.
இம்மாதம் முழுவதும் ஆக அதிகமான பயணங்களை மேற்கொள்ளும் 100 ஓட்டுநர்கள் அதிர்ஷ்டக் குலுக்கில் பங்கேற்கலாம்.
அதில் வெல்லும் 10 பேரில் ஒவ்வொருவருக்கும் 1,000 வெள்ளி மதிப்புள்ள பெட்ரோல் போடுவதற்கான பற்றுச்சீட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்படும்.
நேற்று தொடங்கிய இத்திட்டம் இம்மாதம் 30ஆம் தேதிவரை நடப்பில் இருக்கும்.

