தான் தொடக்கப்பள்ளியில் இருந்தபோதுதான் முதன்முதலாக 'டாமியா கார்' தனக்கு அறிமுகமானதாக பிரவின் நினைவுகூர்ந்தார்.
ஆனால் அன்று 'டாமியா' காருடன் தொடங்கிய அவரது பொழுதுபோக்கு இந்நாள்வரை நீடிக்கும் என்று அப்போது பிரவின் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பத்து ஆண்டுகளாகத் தனது டாமியா காரை அவர் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வருகிறார்.
ஜப்பானில் தயாரிக்கப்படும் 'டாமியா' கார் பகுதிகளை ஒருவர் தானாகவே இணைத்து உருவாக்கலாம். அவ்வாறு இணைக்கும்போது காரை தனித்துவமான, தனக்குப் பிடித்தமான முறையில் வடிவமைக்கலாம் என்று பகிர்ந்துகொண்டார் கால்நடைத் தாதியான 24 வயது எம். பிரவின்.
அதனாலேயே தன்னை வெகுவாகக் கவர்ந்த 'ஜோக்கர்' கதாபாத்திரத்தின் பிரதான நிறங்களைக் கொண்டு தனது காரை அவர் வடிவமைத்து, அழகுப்படுத்தியுள்ளார்.
"சில சமயம் நான் கவலையாக இருக்கும்போது இந்தப் பொழுதுபோக்கு எனக்கு ஆறுதலாக இருந்துள்ளது. எனது காரைப் பராமரிக்கும்போது என்னால் ஏதோ ஒரு வகையில் நிதானித்துச் சிந்திக்க முடிகிறது," என்றார் அவர்.
தற்போது இதுபோன்ற பொழுதுபோக்கைப் பற்றி அதிகமான இளையர்கள் அறிந்திராவிட்டாலும், அடுத்த தலைமுறையினருக்குத் தனது பொழுதுபோக்கைப் பற்றி பகிர்ந்துகொள்ளும் ஆசை தனக்கு உள்ளதாக பிரவின் குறிப்பிட்டார்.
ஒன்றைப் பராமரிக்கும்போது பொறுப்புணர்வு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்புவதாக அவர் கூறினார்.
"நமக்குப் பிடித்தமான வேலையைச் செய்ய முடியாமல் போனாலும்கூட, நமக்குப் பிடித்த பொழுதுபோக்கில் விரும்பி ஈடுபட்டால் அது மனநிறைவைத் தரும்," என்றார் அவர்.

