இயற்கையைத் தனது உற்ற நண்பனாகக் கருதும் தே.சக்திவேல், சிறு வயதிலேயே தூண்டிலைக் கையில் ஏந்தினார். அந்தப் பொழுதுபோக்கு பின்னாளில் அவரை ஏழு நாடுகளுக்குக் கொண்டு சென்றுள்ளது.
ஜப்பான், அமெரிக்கா, மலேசியா முதலிய நாடுகளில் மீன்பிடித்துள்ள சக்திவேல், ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் சில பகுதிகளில் மீன்பிடிப்பதற்கான உரிமத்தையும் பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் காணப்படாத 'ரெயின்போ ட்ரௌட்' மீனை ஜப்பானில் தானே பிடித்தது, அவருக்கு மறக்க முடியாத ஒரு தருணம் என்று பகிர்ந்துகொண்டார்.
தான் பத்து வயதாக இருந்தபோது தன்னுடைய தாத்தா பாசமாக $15 தூண்டில் ஒன்றை முதன்முறையாக சக்திவேலுக்கு வாங்கித் தந்தார்.
அதைக் கொண்டு சிறுவன் சக்திவேல் சாங்கி விலேஜ் பகுதியில் மீனும் பிடித்தார். இன்று கிட்டத்தட்ட $1,500 மதிப்புடைய மீன்பிடிக் கருவிகளைத் தனது சொந்த சேமிப்பில் வாங்கி வைத்திருக்கிறார் அவர்.
"யூடியூப் காணொளிகளைப் பார்த்து மீன்பிடிக்கக் கற்றுக்கொண்டேன். மீன்பிடிப்பதற்குப் பொறுமை அவசியம். மீன் கிடைக்காவிட்டாலும் இயற்கையுடன் நேரத்தைச் செலவழிப்பதும் ஒரு சுகமே," என்றார்.
தற்போது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் விளையாட்டு வடிவமைப்புத் துறையில் பயின்று வருகிறார் 20 வயது சக்திவேல்.
மீன்பிடிக்கும்போது இரவு முழுவதும் கண்விழித்திருப்பது அவருக்குப் பழகிப்போன ஒன்றே. பெரிய மீன்களைத் தண்ணீரைவிட்டு வெளியே இழுக்கும்பொழுது காயங்கள் ஏற்படுவதும் தவிர்க்கமுடியாததே.
இருப்பினும், இந்தப் பொழுதுபோக்கிலிருந்து அவர் பின்வாங்கியதே இல்லை.
மீன்பிடிக்க விரும்பும் இளையர்களுக்கு இந்தப் பொழுதுபோக்கைப் பற்றி கற்றுக்கொடுக்கவும் மீன்பிடிக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொருள்களைப் பயன்படுத்திச் சோதித்துப் பார்க்கவும் சக்திவேல் உதவி வருகிறார்.
"வருங்காலத்தில் மீன் வளர்ப்பு தொடர்பில் பணியாற்றவிரும்புகிறேன்," என்றார் அவர்.