அரசாங்க நிதியுதவி பெறும் புதிய பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம் உதவும்
அரசாங்கத்தால் முழு நிதியுதவி பெறும் ஒரு பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம், குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும், ஆனால் தங்கள் சொந்த வழக்கறிஞர்களை வேலைக்கு அமர்த்த முடியாத சிங்கப்பூரர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்ட உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"சிங்கப்பூரில் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு முறையான நீதி கிடைக்கும் வாய்ப்பை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம்" என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்ட உதவிக்கு தகுதி பெறுவதற்கான வருமான உச்சவரம்பு $950 முதல் $1,500 வரை உயர்த்தப்படும். இதன் மூலம் 35வது வருமான விழுக்காட்டு விகிதம் வரையிலான குடும்பங்கள் பயனடையும்.
போக்குவரத்து அபராதங்கள், குப்பைகளைக் கொட்டிய குற்றங்கள், சூதாட்டம் மற்றும் பந்தயம், ஒருங்கிணைந்த குற்றங்கள், பயங் கரவாதத்தைத் தடுக்கும் நோக்கத்தில் உள்ள சில சட்டங்கள் தவிர, அனைத்து வகையான குற்றங்களுக்கும் சட்டப் பாதுகாப்பு உதவி விரிவுபடுத்தப்படும்.
இந்த மாற்றங்களால், போதிய நிதியாதரவு இல்லாத இன்னும் அதிகமான குற்றஞ்சாட்டப்பட்டோர், முழுநேர வழக்கறிஞராக உள்ள பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் ஒருவரைத் தங்களுக்காக வாதாட நியமிக்க வழி உண்டாகிறது.
பிரிட்டன், ஆஸ்திரேலிய மாநிலங்களான நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் ஹாங்காங் உட்பட 11 பிற நிதித் துறைகளில் உள்ள பல்வேறு குற்றவியல் சட்ட உதவி மாதிரிகளை ஆராய்ந்த பிறகு, குற்றவியல் சட்ட உதவிக்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது.
"நாங்கள் மற்றவர்களிடமிருந்து பல சட்ட அம்சங்களையும் சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கம், குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் ஆகியவற்றின் கருத்துகளையும் பரிசீலித்தோம்," என்றார் திரு சண்முகம்.
"தகுதியான வழக்குகளுக்கு மட்டுமே உதவி வழங்கப்படுவதை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தீர்மானித்துள்ளோம். மேலும் குற்றவியல் சட்ட உதவிக்கான செலவுகள் நிலையானதாக இருப்பதை உறுதிசெய்ய முயல்கிறோம்," என்று அவர் விவரித்தார்.
செல்வந்தர்கள் தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்வதற்கான வழிகளைக் கண்டறிந்து அவற்றைத் தவறாகப் பயன்படுத்தாமல் தடுக்கும் நடவடிக்கைகளை ஏற்படுத்துவது எங்களுக்கு உள்ள மற்றொரு கவலை என்றாரவர்.
பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம் சட்ட அமைச்சின்கீழ் ஒரு பிரிவாக நிறுவப்படும். அது சிவில் வழக்குகள், நொடித்துபோதல், பொது அறங்காவலர் அலுவலகம் போன்றவற்றுக்கு ஆதரவளிக்கும் சட்ட உதவிப் பிரிவு போன்று செயல்படும்.
பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகத்தில் முழு நேர வழக்கறிஞர்கள் பணியாளர்களாக இருப்பார்கள். வழக்குகளை பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர்களாக எடுத்துக்கொள்வார்கள். இது புதிய பட்டதாரிகள் மற்றும் இளைய வழக்கறிஞர்கள் மற்றும் அத்தகைய வேலையைச் செய்ய விரும்பும் இடைக்கால அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்களை உள்ளடக்கும்.
இது காலப்போக்கில் அதிகரிக்கப்படும். சில வழக்குகள் இந்தப் பிரிவுக்கு வெளியே செயல்படும் தகுதி பெற்ற வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் என்றார் அமைச்சர்.