தவ்வு தயாரிக்கும் தொழிற்சாலையில் செத்த எலியும், கரப்பான்பூச்சிகளும், ஈக்களும் மொய்த்துக்கொண்டிருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொழிற்சாலையின் உரிமையாளருக்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜுரோங் உணவு மையத்தில் அமைந்துள்ள செங் ஹுவாட் தவ்வு தொழிற்சாலை உணவு தயாரிக்கும் இடத்தைச் சரியாகப் பராமரிக்கத் தவறியதற்காக உணவு விற்பனை சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியது.
சென்றாண்டு ஜூலை 29ஆம் தேதி, சிங்கப்பூர் உணவு அமைப்பு அதிகாரிகள் தொழிற்சாலையைச் சோதனையிட்டனர். அப்போது, தொழிற்சாலையில் ஏகப்பட்ட கரப்பான்பூச்சிகளையும், ஒரு செத்த எலியையும் அவர்கள் கண்டனர். அதோடு, உட்கூரை, சுவர்களில் சிதைவுகளும், பல இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் இருப்பதையும் அதிகாரிகள் கண்டனர்.
இதனைத் தொடர்ந்து, சுமார் 3,000 கிலோ சோயா பொருள்கள் வீசப்பட்டன. அங்காடிகளில் விற்கப்பட்ட செங் ஹுவாட் தவ்வு பொருள்களும் அகற்றப்பட்டன.
இந்தத் தொழிற்சாலையில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனை திருப்பதியளிப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.


