நேர்மையான பணமாற்று விவரங்களை அடையாளம் காணவும் தங்களது வங்கி, கட்டண விவரங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் உணவங்காடிக் கடைக்காரர்களுக்குச் சொல்லித்தரும் டிபிஎஸ் வங்கியின் பயிலரங்கு மூலம், சொங் பாங் சந்தை, உணவங்காடி நிலையக் கடைக்காரர்கள் பலனடையவிருக்கின்றனர்.
சென்ற ஆண்டு வாடிக்கையாளர்கள் கடைக்காரர்களை ஏமாற்றிய சம்பவங்கள் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வங்கி இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரமாக வாடிக்கையாளர்கள் போலியான அல்லது பழைய பணப் பரிவர்த்தனைகளைக் காட்டியதாக டிபிஎஸ் வங்கியின் பேச்சாளர் கூறினார். இதனையொட்டி சென்ற செப்டம்பரில் உணவங்காடி நிலையத்தைத் தத்தெடுக்கும் திட்டத்தை வங்கி தொடங்கியது.
உணவங்காடிக் கடைக்காரர்களுக்கு மின்னிலக்கத் திறன்களைக் கற்றுத்தருவது இதன் நோக்கம்.
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து வங்கி இந்த மின்னிலக்கப் பயிலரங்குகளை நடத்தவிருக்கிறது.
உணவங்காடிக் கடைக்காரர்கள் பாதுகாப்பான மின்னிலக்க முறைகளை அறிந்துகொள்ள உதவுவது மிகவும் முக்கியம் என்று சட்ட, உள்துறை அமைச்சரும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு க. சண்முகம் கூறினார்.

