வீவக எனும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை வீட்டு விலைகள் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளன.
கடந்த 21 மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த வீட்டு விலைகள் மார்ச் மாதத்திலும் கூடின.
பொதுவாக பிப்ரவரி மாதத்தில் வீடுகளின் விற்பனை மந்தமாக இருக்கும். இந்த நிலையில் இவ்வாண்டு பிப்ரவரிக்குப் பிறகு மறுவிற்பனை வீடுகளின் விற்பனை மீண்டும் சூடுபிடித்தது.
பினாக்கல்@டக்ஸ்டனில் உள்ள ஐந்தறை வீடு ஒன்று இதுவரை இல்லாத அளவுக்கு $1,388,888 விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இது, மறுவிற்பனை வீட்டு விலையில் புதிய சாதனையாகும்.
வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை மார்ச் மாதத்தில் 0.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சொத்து விற்பனை இணையத்தளங்களான '99.co', 'SRX' தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் இதனை ஒப்பிட்டால் 12 விழுக்காடு விலை கூடியிருப்பதை தரவுகள் காட்டுகின்றன.
கட்டி முடிக்கப்பட்ட, கட்டி முடிக்கப்படாத ஆகிய இரு குடியிருப்பு வட்டாரங்களிலும் விலை உயர்வைக் காண முடிகிறது.
மூவறை வீட்டு விலைகள் 1.4 விழுக்காடு அதிகரித்தாலும் ஐந்தறை வீட்டு விலைகள் 0.1 விழுக்காடு குறைந்துள்ளன.
இதற்கிடையே விற்கப்பட்ட வீடு களின் எண்ணிக்கை 19.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஏறக்குறைய 2,269 மறுவிற்பனை வீடுகள் கடந்த மாதம் கைமாறியுள்ளன.
இது, இதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிட்டால் 0.1 விழுக்காடு அதிகம்.
கடந்த மாதம் 27 கழக வீடுகள் ஒவ்வொன்றும் குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி மாதத்தில் விற்கப்பட்ட 29 வீடுகளுடன் ஒப்பிட்டால் இது சற்றுக்குறைவு. ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்கப்பட்ட வீடுகளில் ஏழு, தோ பாயோவில் அமைந்துள்ளன.
நான்கு, பிஷான் மற்றும் மத்திய வட்டாரத்திலும் மூன்று குவீன்ஸ் டவுனிலும் இடம்பெற்றுள்ளன.
மொத்தம் 27 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்ட வீடுகள், கடந்த மாதம் ஒட்டுமொத்த விற்பனையில் 1.2 விழுக்காடாகும்.
கேன்டோன்மெண்ட் ரோட்டில் உள்ள பினாக்கல்@டக்ஸ்டனில் உள்ள ஐந்தறை வீட்டின் விலை, இதற்கு முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் பிஷானில் உள்ள நேச்சுரா லோஃப்டில் உள்ள வடிவமைத்து, கட்டி, விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஐந்தறை வீடு $1.36 மில்லியன் வெள்ளிக்கு விலை போனது.
அதன் பிறகு பினாக்கல்@டக்ஸ்டனில் உள்ள வீடு $1.38 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் மொத்தம் $83 மில்லியன் மதிப்புள்ள மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டுள்ளன.

