புக்கிட் மேரா வட்டாரத்தின் புளோக் 38 பியோ கிரெசண்ட்டில் உள்ள அடுக்குமாடி வீட்டில் மின்-சைக்கிளால் தீ மூண்டது. சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.
நேற்றுக் காலை எட்டேகால் மணியளவில் தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
பத்தாவது மாடியில் உள்ள வீட்டின் வரவேற்பறையில் மின் சைக்கிள் ஒன்று மின்னூட்டம் செய்யப்பட்டபோது, அதன் மின்கலனில் இருந்து தீ மூண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கரும்புகையுடன் வேகமாகப் பரவிய தீயை, தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைத்தனர். சம்பவத்தில் அந்த வீட்டுடன் தாழ்வாரத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்தது. அக்கம்பக்க வீடுகளில் இருந்த ஏறக்குறைய 30 பேர் முன்னெச்சரிக்கையாகத் தாங்களாகவே வீடுகளை விட்டு வெளியேறினர்.
மின் சைக்கிள்கள், தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் போன்றவற்றை மின்னூட்டம் செய்யும்போது நீண்ட நேரமோ இரவு முழுவதுமோ கவனிப்பின்றி விட்டுச்செல்ல வேண்டாம் என்று குடிமைத் தற்காப்புப் படை நினைவுறுத்தியது.

