தாம் மேற்கொண்ட பயிற்சிகளுக்கான மானியமாக $27,000க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்காக முன்னாள் ஊழியரணி மேம்பாட்டு வாரியத்தை ஒருவர் மோசடி செய்துள்ளார். ஆனால் தாம் மேற்கொண்டதாகக் கூறிய பயிற்சிகளை அவர் நடத்தவில்லை.
இப்போது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் முன்னாள் ஊழியரணி மேம்பாட்டு வாரியத்தை ஏமாற்றிய ஐந்து பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றிருந்தார் 54 வயது மார்ஷ் டெர்ரனோவா திருச்செல்லம் (படம்). அந்த ஐவரும் சேர்ந்து மொத்தம் $73,000 தொகையை ஏமாற்றியுள்ளனர்.
மூன்று பொய்யான கணக்குகளைக் காட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட மார்ஷுக்கு நேற்று 20 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிப்பின்போது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
திரு மார்ஷ் 2013 மற்றும் மார்ச் 2015க்கு இடையில் லோயல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார். லோயல் ரிலையன்ஸ், ஊழியரணி மேம்பாட்டு வாரியத்தால் முதலாளிகள் சார்ந்த பயிற்சிக்கான நிதி வழங்கும் திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்டது. இது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகளுக்கு நிதியளிக்க மானியங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதித்தது.
ஜூன் 2014ல், லோயல் ரிலையன்ஸின் தன்னாட்சி பயிற்சி ஆலோசகரான செரீன் லோ பெ வென், உற்பத்தி நிறுவனமான யோக் மா பிளாஸ்டர்செல் நிறுவனத்துக்கு ஆறு பயிற்சி வகுப்புகளை நடத்தும்படி மார்ஷிடம் கேட்டார். ஆனால் அந்தப் பயிற்சிகள் உண்மையில் நடைபெறவில்லை.
இது ஊழியரணி மேம்பாட்டு வாரியத்தை ஏமாற்றுவதற்கான சூழ்ச்சி என்று தெரிந்தும் மார்ஷ் அதனை ஒப்புக்கொண்டார்.
மார்ஷ் தனது சகாக்களான அப்போது 47 வயதான லோ, அப்போது 34 வயதான பயிற்சி ஆலோசகர் செபாஸ்டியன் சென் யூரன் ஆகியோருக்கு மோசடி திட்டத்தை மறைக்க தேவையான ஆவணங்களை எவ்வாறு தயாரிப்பது என்று கற்பித்தார்.
யோக் மா நிறுவன ஊழியர்கள் பயிற்சிக்கு முழு அளவில் வந்திருக்கிறார்கள், பயிற்சிகள் உண்மையானவை என்ற தவறான எண்ணத்தை உருவாக்குவதற்காக அவரது நாட்குறிப்பில் தேதிகளைப் பயிற்சிக்காக ஒதுக்கியதைக் குறித்து வைத்தார். பயிறசியாளர் களின் வருகையைக் காட்டும் பதிவேடுகளிலும் மார்ஷ் கையெழுத்திட்டார்.
பயிற்சி வகுப்புகளுக்குப் பிறகு, மார்ஷ் தனது பயிற்சிக் கட்டணத்திற்காக லோயல் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தார். அவரது குற்றங்களின் விளைவாக, முன்னாள் ஊழியரணி மேம்பாட்டு வாரியம் ஆறு பயிற்சி வகுப்புகளுக்காக யோக் மா நிறுவனத்துக்கு $27,068 தொகையை வழங்கியது, அதில் மார்ஷுக்கு $7,465 வழங்கப்பட்டது.

